மணல் கடத்தலில் ஈடுபட்ட பிரபல ரவுடி வசூர் ராஜா கைது வேலூர் ஜெயிலில் அடைப்பு


மணல் கடத்தலில் ஈடுபட்ட பிரபல ரவுடி வசூர் ராஜா கைது வேலூர் ஜெயிலில் அடைப்பு
x
தினத்தந்தி 4 Aug 2018 4:08 AM IST (Updated: 4 Aug 2018 4:08 AM IST)
t-max-icont-min-icon

மணல் கடத்தலில் ஈடுபட்டதாக பிரபல ரவுடி வசூர்ராஜாவை போலீசார் அதிரடியாக கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

வேலூர்,

வேலூரை அடுத்த புதுவசூரை சேர்ந்தவர் வசூர் ராஜா (வயது 33). பிரபல ரவுடியான இவர் மீது கொலை, ஆள்கடத்தல், பணம் பறிப்பு உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகளில் கைதாகி ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்த அவர் சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்தார். அதன்பின்னரும் வசூர் ராஜா வேறு ஏதேனும் குற்ற செயல்களில் ஈடுபடுகிறாரா? என போலீசார் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த மாதம் 9-ந் தேதி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்துக்கு வக்கீலுடன் வந்த வசூர் ராஜா, மாவட்ட வருவாய் அலுவலர் செங்கோட்டையன் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்று அளித்தார்.

திருந்தி வாழப்போகிறேன்

அதில், என் மீது பல பொய்யான குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. நான் இனி வரும் காலங்களில் எவ்வித குற்றச்செயல்களிலும் ஈடுபட மாட்டேன். குற்றப்பின்னணி உள்ள நபர்களோடு தொடர்பு வைத்து கொள்ள மாட்டேன். எந்தவித தவறும் செய்ய மாட்டேன் என்று உறுதி அளிக்கிறேன்.

அப்படி ஏதாவது குற்ற பின்னணி உள்ள நபர்களோடு தொடர்பு வைத்துக்கொண்டால் என் மீது எடுக்கும் நடவடிக்கைக்கு கட்டுப்படுகிறேன். மேலும் என் மீது சந்தேகத்தின் பேரில் வழக்கு பதியக்கூடாது. இனிமேல் திருந்தி வாழப்போகிறேன் என்று கூறியிருந்தார்.

மணல் கடத்தல்

ஆனாலும் அவர் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததாகவும், பெருமுகை, அலமேலுமங்காபுரம், சத்துவாச்சாரி, புதுவசூர் ஆகிய பகுதிகளில் மீண்டும் ரவுடியிசத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் அப்பகுதியில் உள்ள பாலாற்றில் இருந்து மாட்டு வண்டிகள் மற்றும் மினிவேன்கள் மூலம் மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும் மற்ற மாட்டு வண்டி மற்றும் மினிவேன் டிரைவர்களிடம் தனது கட்டுப்பாட்டில் தான் அனைவரும் இருக்க வேண்டும் என மிரட்டி வந்துள்ளார்.

இதுகுறித்து சத்துவாச்சாரி போலீஸ் நிலையம் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமாருக்கு புகார்கள் சென்றன. அதன்பேரில் வசூர் ராஜாவை கைது செய்யும்படி போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து சத்துவாச்சாரி போலீசார் நேற்று புதுவசூரில் கூட்டாளிகளுடன் பதுங்கியிருந்த ரவுடி வசூர் ராஜாவை அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலில் அடைத்தனர். 

Next Story