மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்காக 15 இடங்களில் இலவச மருத்துவ முகாம் - நாளை மறுநாள் தொடங்குகிறது


மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்காக 15 இடங்களில் இலவச மருத்துவ முகாம் - நாளை மறுநாள் தொடங்குகிறது
x
தினத்தந்தி 4 Aug 2018 9:20 AM IST (Updated: 4 Aug 2018 9:31 AM IST)
t-max-icont-min-icon

மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்காக 15 இடங்களில் இலவச மருத்துவ முகாம் நாளை மறுநாள் தொடங்க உள்ளது.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டத்தில் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்காக இலவச மருத்துவ முகாம்கள் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) தொடங்கி வருகிற 28-ந் தேதி வரை 15 இடங்களில் நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் 15 ஒன்றியங்களில் 6 முதல் 18 வயது உள்ள மாற்றுத்திறன் கொண்ட மாணவ, மாணவியர்களுக்கான மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இதில் பார்வையின்மை, குறைபார்வை, தொழுநோயால் பாதிக்கப்பட்டவர், காது கேளாமை, உடலியக்க குறைபாடு, குள்ளத்தன்மை உள்ளிட்ட குறைபாடுகள் கொண்ட மாற்றுத்திறன் மாணவர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

அதேபோல் அறிவுத்திறன் குறைபாடு, மனநோய், புறஉலக சிந்தனை குறைபாடு, மூளை முடக்குவாதம், தசைச்சிதைவு நோய், மூளை நரம்பு சார்ந்த குறைபாடு, கற்றல் திறன் குறைபாடு, விழிதிசு குறைபாடு, பேச்சு மற்றும் மொழித்திறன் குறைபாடு, ரத்த சம்பந்தமான குறைபாடு, ரத்தம் உறையாமை, செல்பிரிதல் குறைபாடு, பல்வகை மாற்றுத்திறனுடன் இணைந்து காது கேளாமை, ஆசிட் வீச்சால் ஏற்படும் பாதிப்பு, சர்க்கரை நோயால் ஏற்படும் இருதய கோளாறு ஆகிய குறைபாடுகள் உள்ளவர்களும் முகாமில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

நாளை மறுநாள் (திங்கட் கிழமை) நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 7-ந் தேதி சேந்தமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்திலும், 8-ந் தேதி ராசிபுரம் அண்ணாசாலை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்திலும் முகாம்கள் நடைபெற உள்ளது. அதேபோல் திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9-ந் தேதியும், பரமத்தி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10-ந் தேதியும், மோகனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 13-ந் தேதியும் முகாம் நடைபெறும்.

மேலும் புதுச்சத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 14-ந் தேதியும், எருமப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 16-ந் தேதியும், வெண்ணந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 17-ந் தேதியும், நாமகிரிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 20-ந் தேதியும், பள்ளிபாளையம், ஆவாரங்காட்டில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 21-ந் தேதியும் முகாம்கள் நடைபெற உள்ளது.

தொடர்ந்து 23-ந் தேதி எலச்சிபாளையம், அரசு மேல்நிலைப்பள்ளியயிலும், 24-ந் தேதி கொல்லிமலையில் வாழவந்தி நாடு, செம்மேடு, ஜி.டி.ஆர். மேல்நிலைப்பள்ளி வளாகத்திலும், 27-ந் தேதி கபிலர்மலை, அரசு மேல்நிலைப்பள்ளியிலும், 28-ந் தேதி மல்லசமுத்திரம், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்திலும் முகாம்கள் நடைபெறும். இவ்வாறு 15 இடங்களில் நடைபெறும் முகாம்களில் அந்தந்த ஒன்றியங்களுக்கு உட்பட்ட மாற்றுத்திறன் கொண்ட மாணவர்கள் இதில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

இதில் தேசிய அடையாள அட்டை வழங்குதல், உதவி உபகரணங்களுக்கான பதிவு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக பராமரிப்பு உதவித்தொகை, கல்வி உதவித்தொகை ஆகியவற்றை பெற பதிவுசெய்தல். அதேபோல் முதல்-அமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சைக்கான ஏற்பாடுகளும் செய்து தரப்படும். இந்த முகாமில் கலந்துகொள்ள ரேஷன்கார்டு, தேசிய அடையாள அட்டை ஆகியவற்றின் நகல்கள் தலா 2-ம், பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படம் 2-ம் கொண்டு வரவேண்டும்.

முகாமில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்திட்டம் மற்றும் அளவீட்டு முகாம் உடன் இணைந்து சிறப்பு டாக்டர்களை கொண்டு ஆய்வு செய்து மாணவர்களுக்கு வேண்டிய உதவிகள் வழங்கப்படும். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் அனைவரும் தவறாது மேற்கண்ட தேதிகளில் நடைபெறும் மருத்துவ முகாமில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story