சுற்றுலா வளர்ச்சியில் தமிழகம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது - அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்


சுற்றுலா வளர்ச்சியில் தமிழகம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது - அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்
x
தினத்தந்தி 4 Aug 2018 4:42 AM GMT (Updated: 4 Aug 2018 4:42 AM GMT)

சுற்றுலா வளர்ச்சியில் தமிழகம் இந்திய அளவில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது என்று ஒகேனக்கல்லில் நடந்த ஆடிப்பெருக்கு விழாவில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பேசினார்.

பென்னாகரம்,

தமிழக அரசின் சுற்றுலாத்துறை, தர்மபுரி மாவட்ட நிர்வாகம் ஆகியவற்றின் சார்பில் ஆடிப்பெருக்குவிழா ஒகேனக்கல்லில் நேற்று தொடங்கியது. விழாவுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் சங்கர் தலைமை தாங்கினார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் காளிதாசன் வரவேற்றார். உதவி கலெக்டர் சிவன்அருள், தாசில்தார் அழகுசுந்தரம், சுற்றுலா அலுவலர் சிவராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிருஷ்ணன், விமலன், கலைபண்பாட்டுதுறை மண்டல உதவி இயக்குனர் ஹேமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு ஆடிப்பெருக்கு விழாவையொட்டி அமைக்கப்பட்டுள்ள பல்துறை பணிவிளக்க கண்காட்சியை திறந்து வைத்தார். விழாவில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கலந்து கொண்டு அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் 192 பேருக்கு ரூ.45 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பேசியதாவது:-

குடகுமலையில் தொடங்கி பூம்புகார் வரை காவிரி ஆறு பாயும் அனைத்து பகுதிகளிலும் கரிகாலசோழனின் ஆட்சி காலத்தில் இருந்து ஆடிப்பெருக்கு விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தட்சிண கங்கை எனப்படும் காவிரி ஆற்றில் 66 கோடி தீர்த்தங்கள் உள்ளன. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார். சட்டப்போராட்டம் மூலம் காவிரி நதிநீர் பிரச்சினையில் தமிழகத்தின் உரிமை நிலை நாட்டப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நல்லாட்சி நடப்பதால் காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. மேட்டூர் அணை நிரம்பி பாசனத்திற்கு தண்ணீர் கிடைத்து உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சுற்றுலா வளர்ச்சியில் தமிழகம் இந்திய அளவில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. வெளிநாட்டு பயணிகளை கவர்வதில் தமிழகம் 4-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் சிறப்பான சாலை போக்குவரத்து, மின்சார வசதி உள்ளிட்டவை இருப்பதால் சுற்றுலா துறை சிறப்பான வளர்ச்சியை பெற்று வருகிறது. இவ்வாறு அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பேசினார்.

விழாவில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசுகையில், ஜெயலலிதா காட்டிய வழியில் தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகிறது. ஏழை, எளிய மக்களின் மேம்பாட்டிற்கான பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக பெண்கள், மாணவ-மாணவிகளின் வளர்ச்சிக்கான சிறப்பு திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து தமிழகஅரசு செயல்படுத்தி வருகிறது. இந்த ஆட்சிக்கு தமிழக மக்கள் தொடர்ந்து உறுதுணையாக இருக்க வேண்டும், என்று பேசினார்.

முன்னதாக நேற்று காலை முதல் பிற்பகல் வரை தென்னக பண்பாட்டு மையம், சுற்றுலாத்துறை, கலைபண்பாட்டு துறை ஆகியவற்றின் சார்பில் கிராமிய பல்சுவை கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த கலைநிகழ்ச்சிகளை ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் கண்டு களித்தனர். விழாவில் மாவட்ட ஊராட்சி முன்னாள் தலைவர்கள் டி.ஆர்.அன்பழகன், தொ.மு.நாகராஜன், மத்திய கூட்டுறவு வங்கி முன்னாள் துணைத்தலைவர் வேலுமணி, பேரூராட்சி முன்னாள் தலைவர்கள் சுப்பிரமணியன், பாபு, கூட்டுறவு சங்க தலைவர்கள் கோவிந்தசாமி, பெரியண்ணன், சிவப்பிரகாசம், கோபால், செல்வராஜ் உள்பட பல்வேறு அரசு துறைகளின் அதிகாரிகள், சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாரதிதாசன் நன்றி கூறினார்.

Next Story