தினம் ஒரு தகவல் : வீடு வாங்கும் போது ஏற்படும் செலவுகள்


தினம் ஒரு தகவல் :  வீடு வாங்கும் போது ஏற்படும் செலவுகள்
x
தினத்தந்தி 4 Aug 2018 11:42 AM IST (Updated: 4 Aug 2018 11:42 AM IST)
t-max-icont-min-icon

ஒரே இடத்தில், ஒரே பரப்பளவில் இருந்தாலும் ஒவ்வொரு அபார்ட்மெண்ட் வீடும் தனித்தனி தேவைகளை கொண்டு தான் அமைக்கப்பட்டுள்ளன.

 ஒரே மாதிரியான வீடுகளாக அவை வெளித்தோற்றத்தில் தெரிந்தாலும் உள்ளே அவை எப்படி இருக்கின்றன என்பதில் தான் வித்தியாசங்கள் உள்ளன.

சிறிய இடமாக இருந்தாலும் விசாலமான தோற்றத்தையும், வசதியையும் உணருமாறு அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டுவதில் சில கட்டுமான நிறுவனங்கள் சிறந்து விளங்குகின்றன. ஜன்னல்களை சரியான இடத்தில் வடிவமைப்பதன் மூலம், ஆரோக்கியமான காற்றும் சூரிய ஒளியும் கிடைப்பதை உறுதி செய்ய இயலும். ஒரு கட்டிடத்தை உங்கள் இல்லமாக மாற்றுவதற்கு நிறைய செலவு ஆகும். அந்தச் செலவு நாம் நினைக்கக்கூடிய அளவு சொற்பமானதல்ல.

நல்ல காற்றோட்டமான வீடாக இருந்தால், கோடைகாலத்தில் மட்டுமே குளிர்சாதன வசதியை இயக்கினால் போதுமானது. பட்டப்பகலில் விளக்குகளைப் போட வேண்டிய அவசியம் இருக்காது. துணி உலர்த்தும் எந்திரத்துக்குக் கூடுதலாக செலவழிக்க வேண்டியதில்லை. உங்கள் பால்கனியிலேயே உலர்த்திக்கொள்ள முடியும்.

ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்க வேண்டும் என்று தீர்மானித்துவிட்டால், உள்ளே என்னென்ன மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்பதை முதலிலேயே திட்டமிட வேண்டும். வர்ணம் பூசுவது, தண்ணீர் குழாய் மற்றும் மின்சாதனங்களுக்கான செலவுகள் எவ்வளவு என்று கணக்கிட வேண்டும். இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான அடுக்குமாடிக் குடியிருப்பு வீடுகளில் தரமான முறையில் தரைத்தளங்கள் அமைக்கப்படுகின்றன. சமையலறை மற்றும் குளியல் அறைகளிலும் உயர்தர பளிங்குகளைக் கொண்டே சுவர்களை அமைக்கிறார்கள். குளியலறை மற்றும் கழிப்பறையில் உள்ள குழாய்கள் மற்றும் இன்ன பிற சாதனங்களும் உத்தரவாதமுள்ளவையாக அமைக்கப்படுகின்றன.

அடுக்குமாடிக் குடியிருப்பு வீடுகளில் குடிபுகும் போது மிகவும் கவனிக்க வேண்டியவை கதவுகளும் ஜன்னல்களும் தான். நீங்கள் வாங்கப்போகும் வீட்டில் செய்யப்பட்டுள்ள இன்டீரியர் வசதிகளை முழுமையாக ஆய்வு செய்த பிறகே முடிவெடுக்க வேண்டும். அப்போது தான் உங்கள் வீட்டுக்கு நீங்கள் செய்ய வேண்டிய முழுமையான செலவைத் தெரிந்து கொள்ள முடியும்.

இன்டீரியர் வேலைகளுக்கு மட்டுமே இன்றைய காலத்தில் லட்சக்கணக்கில் செலவாகும் நிலை உள்ளது. அதனால் முன்பே திட்டமிட்டுக் கொள்வது அவசியம்.


Next Story