ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு பெரம்பலூர்-அரியலூர் மாவட்ட கோவில்களில் சிறப்பு வழிபாடு


ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு பெரம்பலூர்-அரியலூர் மாவட்ட கோவில்களில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 4 Aug 2018 7:14 AM GMT (Updated: 4 Aug 2018 7:14 AM GMT)

ஆடிப்பெருக்கு விழாவினை முன்னிட்டு பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பெரம்பலூர்,

ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் என்பதால் அம்மன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவது வழக்கம். இதனால் ஆடி மாதத்தில் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவில்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில் ஆடி மாதம் 3-வது வெள்ளிக்கிழமை என்பதாலும், ஆடி 18-ந்தேதி ஆடிப்பெருக்கு என்பதாலும் நேற்று பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. ஆடிப்பெருக்கு பண்டிகை ஆற்றங்கரைகளை ஒட்டி வாழும் மக்களே வெகுவிமர்சையாக கொண்டாடுவார்கள். அதிலும் காவிரி ஆற்றங்கரை மக்கள் குறிப்பிடத்தக்கவர்கள். ஆனால் பெரம்பலூர் மாவட்டத்தில் காவிரி ஆறு கிடையாது என்பதால் கோவில்களில் மக்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூரில் புகழ்பெற்ற மதுரகாளியம்மன் கோவிலுக்கு காலை முதலே பக்தர்கள் கூட்டம், கூட்டமாக கோவிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர். இதில் புதுமண தம்பதிகளும் வந்தனர். பின்னர் அவர்கள் நீண்ட வரிசையில் நின்று காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர். கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மதியம் உச்சிகால பூஜை நடைபெற்றது. கோவில் முன்பு விளக்கு ஏற்றும் இடத்தில் வைக்கப்பட்டுள்ள வாடா விளக்கில் பக்தர்கள் தாங்கள் கொண்டு வந்த எண்ணெய், நெய் ஆகியவற்றை ஊற்றி தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். இதில் பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த திரளான பக்தர்கள் பயபக்தியுடன் அம்மனை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

கோவிலில் பக்தர்களின் கூட்டத்தை சமாளிக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும் பக்தர்கள் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் போலீசார் சோதனை செய்த பிறகே கோவில் உள்ளே அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆடிப்பெருக்கு விழாவினை கொண்டாட பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து மக்கள் திருச்சி காவிரி ஆற்றங்கரைக்கு சென்றனர். ஆடிப்பெருக்கு விழாவினை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. அரியலூரில் உள்ள காந்தி மார்க்கெட் மாரியம்மன், கோர்ட்டு தெரு வீரபத்திரர் கோவில்களில் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. அரியலூர் பஸ் நிலையம் அருகே உள்ள விநாயகர் கோவிலில் இருந்து பக்தர்கள் பறவை காவடி சுமந்தும், அலகு குத்தியும், தீ சட்டி ஏந்தியும், பால்குடம் சுமந்தும் ஊர்வலமாக புறப்பட்டனர். மார்க்கெட் தெரு, தேரடி, எம்.பி. கோவில் தெரு வழியாக வீரபத்திரர் கோவிலுக்கு வந்தடைந்தனர். பின்னர் சாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதே போல் அரியலூர் காந்தி மார்க்கெட் மாரியம்மன் கோவிலுக்கும் பக்தர்கள் பால்குடம் சுமந்து ஊர்வலமாக வந்தனர்.

ஆடிப்பெருக்கை முன்னிட்டு திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் கொள்ளிட தாய்க்கு நன்றி செலுத்தும் வகையில் மங்கள மங்கையர் ஆற்றில் ஒன்றாக கூடி மணலை கொண்டு கோவில் போல் அமைத்து பழங்கள், சர்க்கரை கலந்த பச்சரசி உள்ளிட்ட மாவுப் பொருட்களினால் ஆன தின்பண்டங்களை வாழை இலையில் படையலிட்டு கொள்ளிடத் தாயை வணங்கினர். மேலும், மங்கள மங்கையர் தங்களது தாலி கயிறுகளை புதிய மஞ்சள் கயிறுகளாக மாற்றி குங்குமம் இட்டு கொண்டனர். அனைவரும் படையல் பொருட்களை பிரசாதமாக வழங்கினர்.

மேலும், புதுமண தம்பதிகள் கொள்ளிடம் ஆற்றில் வந்து தங்களது மணமாலைகளை தண்ணீரில் விட்டு வழிபட்டனர். தொடர்ந்து, தங்களது மஞ்சள் கயிறுகளை புதிய மஞ்சள் கயிறாக மாற்றி குங்குமம் இட்டுக்கொண்டனர். மேலும், இதேபோல், திருமழபாடி, புதுக்கோட்டை, ஏலாக்குறிச்சி, தூத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கொள்ளிட ஆற்றில் அப்பகுதி பொதுமக்கள் வழிபாடு நடத்தினர்.

இதேபோல் ஜெயங்கொண்டம், தா.பழூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளை சேர்ந்த புதுமண தம்பதிகள் மதனத்தூர் கொள்ளிடம் ஆற்றில் மணமாலையை தண்ணீரில் விட்டனர். கடந்த சில வருடங்களாக கொள்ளிடம் ஆற்றில் நீர்வரத்து இல்லாததால் புதுமண தம்பதிகள் ஏரி குளங்களை தேடி அலைந்து தமது திருமணத்தின்போது அணிவித்த மாலைகளை அவற்றில் விட்டு பூஜை செய்தனர். தற்போது, கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் வருவதால் ஆற்றில் மாலைகளை இட்டு வழிபாடு நடத்தினர். மதனத்தூர் கொள்ளிடம் ஆற்றங்கரைக்கு ஏராளமானோர் குவிந்தனர். இங்கு கும்பல் அதிகமானதால் ஒரு சிலர் அணைக்கரை கொள்ளிடம் ஆற்றங்கரைக்கு மாலையிட சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், செந்துறை, இரும்புலிக்குறிச்சி, விக்கிரமங்கலம், தூத்தூர், பரணம், குமிழியம், உடையார்பாளையம், சிலால், வாணதிரையன்பட்டினம் மற்றும் தா.பழூர் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான புதுமண தம்பதிகள் குவிந்து மண மாலையை ஆற்றில் விட்டு வழிபட்டனர்.

Next Story