தபால் ஊழியர் வீட்டில் 25 பவுன்நகை, ரூ.2 லட்சம் கொள்ளை - பூட்டை உடைத்து மர்ம ஆசாமிகள் கைவரிசை


தபால் ஊழியர் வீட்டில் 25 பவுன்நகை, ரூ.2 லட்சம் கொள்ளை - பூட்டை உடைத்து மர்ம ஆசாமிகள் கைவரிசை
x
தினத்தந்தி 4 Aug 2018 1:10 PM IST (Updated: 4 Aug 2018 1:10 PM IST)
t-max-icont-min-icon

திருச்சி எடமலைப்பட்டி புதூரில் பட்டப்பகலில் தபால் ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம ஆசாமிகள் 25 பவுன்நகை, ரூ.2 லட்சம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.

திருச்சி,

திருச்சி எடமலைப்பட்டி புதூர் சாந்திநகரை சேர்ந்தவர் கணேஷ்(வயது49). இவர் திருச்சி தபால்துறை அலுவலகத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அனிதா. இவர் திருச்சி காஜாநகரில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இருவரும் வேலைக்கு செல்வதால் காலையிலேயே வீட்டில் மதியத்திற்கான சாப்பாடு தயார் செய்து எடுத்து சென்று விடுவார்கள். பின்னர் பணிமுடிந்து இருவரும் மாலையில் தான் வீடு திரும்புவார்கள். இதுபோல நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு வீட்டை பூட்டி சாவியை எடுத்து கொண்டு கணேஷ் மற்றும் அவரது மனைவி பணிக்கு சென்று விட்டனர்.

இந்த நிலையில் மாலை 5 மணிக்கு பணி முடிந்து கணேஷ் முதலில் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவில் உள்ள பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்த நிலையில் கிடந்தது. அதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டிற்குள் சென்றார். அங்கு படுக்கை அறையில் உள்ள பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 25 பவுன்நகை, ரூ.2 லட்சம் மற்றும் 2 செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. கொள்ளைபோன நகையின் மதிப்பு ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் ஆகும். கணவன், மனைவி இருவரும் காலை 9 மணிக்கு வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றால் மீண்டும் வீடு திரும்ப மாலை ஆகிவிடுகிறது என்பதை நோட்டமிட்ட ஆசாமிகள், திட்டமிட்டே பட்டப்பகலில் வீட்டு கதவின் பூட்டை உடைத்து கைவரிசை காட்டி இருப்பது தெரியவந்தது.

இது தொடர்பாக எடமலைப்பட்டி புதூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில், கே.கே.நகர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜா(பொறுப்பு) மற்றும் போலீசார் கொள்ளை நடந்த தபால் ஊழியர் கணேஷ் வீட்டிற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். மேலும் வீட்டில் கொள்ளையர்களின் கைரேகை பதிந்துள்ளதா? என கண்டறிய கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் சேகரிக்கப்பட்டன.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் பழைய குற்றவாளிகள் யாரேனும் கைவரிசை காட்டி இருக்கலாமா? என அவர்களின் பெயர் பட்டியலை எடுத்து கைரேகைகள் ஒத்துப்போகிறதா? என ஆய்வு செய்து வருகிறார்கள். எடமலைப்பட்டி புதூரில் பூட்டிய வீட்டை நோட்டமிட்டு பட்டப்பகலில் கைவரிசை காட்டி கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story