நாகர்கோவில் அருகே ஆம்னி பஸ் மீது கிரேன் மோதியது; கண்ணாடிகள் உடைந்ததால் பரபரப்பு


நாகர்கோவில் அருகே ஆம்னி பஸ் மீது கிரேன் மோதியது; கண்ணாடிகள் உடைந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 5 Aug 2018 4:15 AM IST (Updated: 4 Aug 2018 8:57 PM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவில் அருகே குளத்துக்குள் பாய்ந்த காரை மீட்க சென்ற கிரேன், ஆம்னி பஸ் மீது மோதியது. இதில் பஸ் கண்ணாடிகள் உடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நாகர்கோவில்,

நாகர்கோவில் அருகே உள்ள தேரேகால்புதூரில் தேசிய நெடுஞ்சாலையையொட்டி ஒரு குளம் உள்ளது. அந்த குளத்தின் ஓரம் உள்ள சாலையில் சென்ற ஒரு கார் எதிர்பாராத விதமாக குளத்துக்குள் பாய்ந்தது. இந்த சம்பவத்தில் காரில் இருந்தவர்கள் காயமின்றி தப்பினர். அதைத் தொடர்ந்து குளத்துக்குள் பாய்ந்த காரை மீட்டு வெளியே கொண்டுவரும் பணிகள் நேற்று காலை 6.30  மணி அளவில் மேற்கொள்ளப்பட்டது.

இதற்காக கிரேன் கொண்டு வரப்பட்டது. அந்த கிரேன் தேரேகால்புதூர் திருப்பத்தில் திரும்பியபோது, ஒரு ஆம்னி பஸ் நாகர்கோவில் நோக்கி வேகமாக வந்தது. அந்த பஸ் மீது கிரேன் மோதியது. இதில் கிரேன் முன்பகுதியில் இருந்த கொக்கிகள் ஆம்னி பஸ்சில் மோதியதால் பக்கவாட்டு கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அலறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பயணிகளும், டிரைவரும் எந்த காயமும் இன்றி தப்பினர். விபத்து காரணமாக ஆம்னி பஸ் டிரைவருக்கும், கிரேன் டிரைவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதுபற்றிய தகவல் அறிந்ததும், நாகர்கோவில் போக்குவரத்து ஒழுங்குபிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து ஆம்னி பஸ் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

Next Story