காவிரி ஆற்றில் உயர்மட்ட பாலம் விரைவில் அமைக்கப்படும் தம்பிதுரை, அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்


காவிரி ஆற்றில் உயர்மட்ட பாலம் விரைவில் அமைக்கப்படும் தம்பிதுரை, அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்
x
தினத்தந்தி 5 Aug 2018 4:30 AM IST (Updated: 4 Aug 2018 11:17 PM IST)
t-max-icont-min-icon

நெரூர்– உன்னியூர் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் விரைவில் அமைக்கப்படும் என பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தெரிவித்தனர்.

கரூர்,

கரூர் ஒன்றியம் நெரூர் வடபாகம் ஊராட்சிக்கு உட்பட்ட ஒத்தக்கடை காலனி, ஒத்தக்கடை, நெரூர், பழையூர், சின்னகாளிபாளையம், சின்னகாளிபாளையம் காலனி, பெரியகாளிபாளையம் காலனி, பெரியகாளிபாளையம், சேனப்பாடி காலனி, சேனப்பாடி, முனியப்பன் கோவில், மல்லம்பாளையம், முனியப்பனூர் காலனி உள்ளிட்ட பகுதிகளில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ் தலைமையில் நேற்று பொதுமக்களின் இருப்பிடத்திற்கே சென்று கோரிக்கை மனுக்களை பெற்று அவர்களது அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டனர்.


இந்த நிகழ்ச்சியில் பாராளுமன்ற துணை சபாநாயகர் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆகியோர் பேசியபோது கூறியதாவது:–

 மக்களை தேடி அரசு என்ற உன்னத நோக்குடன் மக்கள் இருப்பிடம் தேடி சென்று பொதுமக்களின் குறைகள், தேவைகளை மனுக்களாக பெற்று அந்த மனுக்களின் மீது சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உரிய விசாரணை மேற்கொண்டு உடனுக்குடன் தீர்வு காணப்பட்டு வருகிறது. ஒத்தக்கடை பகுதியில் 48 பணிகள் ரூ.1 கோடியே 6 லட்சம் மதிப்பிலும், சின்னகாளிபாளையம் பகுதியில் 26 பணிகள் ரூ.85½ லட்சம் மதிப்பிலும், சேனப்பாடி பகுதியில் 14 பணிகள் ரூ.32 லட்சத்து 95 ஆயிரம் மதிப்பிலும், நெரூர் பகுதியில் 230 பணிகள் ரூ.4 கோடியே 18 லட்சம் மதிப்பிலும் என்பன உள்ளிட்ட வளர்ச்சி திட்ட பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையான நெரூர்– உன்னியூர் இடையே காவிரியாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும். மேலும் சுற்றுவட்ட சாலை அமைக்கும் பணியும் விரைவில் தொடங்கப்படவுள்ளது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


அதனை தொடர்ந்து மின்னாம்பள்ளி பஞ்சமாதேவி ஊராட்சியில், அரசு காலனி, சந்தனகாளிபாளையம், சந்தனகாளிபாளையம்புதூர், பஞ்சமாதேவி, காளிபாளையம் ஆதிதிராவிடர் தெரு, காளிபாளையம், சீத்தகாட்டூர், அம்பலாகவுண்டன்புதூர், பெரியகவுண்டன்புதூர், புல்லாகவுண்டன்புதூர், கவுண்டன்புதூர், மின்னாம்பள்ளி, மின்னாம்பள்ளி காமராஜ் நகர், மின்னாம்பள்ளி எம்.ஜி.ஆர்.நகர், காட்டூர், கருங்கல் காலனி, சங்கரம்பாளையம் காந்தி நகர், சங்கரம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.

இந்த நிகழ்ச்சிகளின் போது கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. கீதா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் எஸ்.கவிதா, வருவாய் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி, தமிழ்நாடு குடிநீர் வடிகால்வாரிய செயற்பொறியாளர் முத்துமாணிக்கம் (ஊரகம்), தமிழ்நாடு மின்சாரவாரிய உதவி செயற்பொறியாளர் மகாலிங்கம், மண்மங்கலம் வட்டாட்சியர் கற்பகம், வட்டார வளர்ச்சி அதிகாரிகள் செல்வி, பரமேஸ்வரன், ஒன்றிய பொறியாளர் கிருஷ்ணன், மாவட்ட அவை தலைவர் ஏ.ஆர்.காளியப்பன், முன்னாள் கரூர் ஒன்றியக்குழு தலைவர் திருவிக, ஒன்றிய செயலாளர் என்ஜினீயர் கமலக்கண்ணன், மாவட்ட தொழிற்சங்க செயலாளர் பொரணிகணேசன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Next Story