சேரன்மாதேவி அருகே துணிகரம் வீட்டின் கதவை உடைத்து 47 பவுன் நகைகள் கொள்ளை மர்ம நபர்களுக்கு வலைவீச்சு


சேரன்மாதேவி அருகே துணிகரம் வீட்டின் கதவை உடைத்து 47 பவுன் நகைகள் கொள்ளை மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 5 Aug 2018 3:00 AM IST (Updated: 4 Aug 2018 11:57 PM IST)
t-max-icont-min-icon

சேரன்மாதேவி அருகே, வீட்டின் கதவை உடைத்து 47 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்று விட்டனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

சேரன்மாதேவி,

சேரன்மாதேவி அருகே, வீட்டின் கதவை உடைத்து 47 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்று விட்டனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

சுவர் ஏறி குதித்த மர்மநபர்கள்

நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி அருகே உள்ள இடையன்குளம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் மைதீன் அப்துல் காதர் (வயது 56). வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவர் தற்போது தனது மனைவி பண்ணை மீராளுடன் (53) சொந்த ஊரில் வசித்து வருகிறார். இவர்களுடைய மகன் தற்சமயம் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு மைதீன் அப்துல் காதர் தனது மனைவியுடன் வீட்டின் முன் பகுதியில் உள்ள அறையில் படுத்து உறங்கியுள்ளார். அப்போது மர்ம நபர்கள் அவரது வீட்டின் காம்பவுண்டு சுவர் ஏறிக் குதித்து உள்ளே நுழைந்துள்ளனர்.

பின்பக்க கதவு உடைப்பு

பின்னர் வீட்டின் பின்பக்க தாழ்ப்பாளை உடைத்து வீட்டுக்குள் நுழைந்துள்ளனர். வீட்டில் உள்ள ஒரு அறைக்கு சென்றுள்ள மர்மநபர்கள் அங்கிருந்த பீரோ சாவியை எடுத்து, பீரோவை திறந்துள்ளனர். பின்னர் அதில் இருந்த 47 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றனர்.

கணவன்– மனைவி இருவரும் நேற்று காலை வழக்கம் போல் எழுந்தனர். வீட்டின் பின்வாசலுக்கு சென்ற போது, கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் உடனடியாக பீரோ இருந்த அறைக்கு ஓடிச்சென்று பார்த்த போது அங்கு பீரோ திறந்து கிடந்ததையும், அதில் இருந்த தங்க நகைகள் காணாமல் போனதையும் கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்தனர். நள்ளிரவில் நன்றாக அசந்து உறங்கிய நேரத்தில் யாரோ மர்ம நபர்கள் வீட்டின் உள்ளே புகுந்து, தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்று விட்டது தெரியவந்தது.

மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

இச்சம்பவம் பற்றி உடனடியாக சேரன்மாதேவி போலீசில் மைதீன் அப்துல் காதர் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். நெல்லையில் இருந்து கைரேகை மற்றும் தடயவியல் நிபுணர்களும் வந்து, அங்கு பதிவாகி இருந்த ரேகைகளையும், தடயங்களையும் சேகரித்தனர்.

கொள்ளை போன நகைகளின் மதிப்பு ரூ.9 லட்சம் என கூறப்படுகிறது. போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் ஜோன்ஸ் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை தேடி வருகிறார். இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story