தி.மு.க. பிரமுகர் கொலை: வடமாநில தொழிலாளி மேற்குவங்கத்தில் குடும்பத்துடன் சிக்கினார்
சிவகாசி அருகே தி.மு.க. பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சொந்த ஊருக்கு தப்பிச் சென்ற வடமாநில தொழிலாளியை குடும்பத்துடன் மடக்கி பிடித்த போலீசார் அவர்களை சிவகாசிக்கு அழைத்து வருகின்றனர்.
சிவகாசி,
சிவகாசி அருகே உள்ள ரெங்கசமுத்திரப்பட்டியை சேர்ந்தவர் செல்வம் என்கிற செல்வராஜ் (வயது 40). தி.மு.க. பிரமுகரான இவர் பட்டாசு ஆலை வேலை செய்து வந்தார். கடந்த 2–ந்தேதி காலை செல்வம் தான் வேலை செய்து வந்த பட்டாசு ஆலையின் அருகில் உள்ள கிணற்றில் பிணமாக மிதந்தார். கழுத்தை துண்டால் இறுக்கி அவர் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து மாரனேரி போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது செல்வம் வேலை செய்து வந்த அதே பட்டாசு ஆலையில் வேலை செய்த அசாம் மாநிலத்தை சேர்ந்த உசேன்அலி (45) மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்தவர்கள் மாயமானது தெரியவந்தது.
உசேன்அலி மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்தவர்கள் சொந்த ஊருக்கு தப்பிச் சென்று இருக்கலாம் என போலீசார் சந்தேகம் அடைந்தனர். அதை தொடர்ந்து சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள ரெயில் நிலையங்களுக்கு உசேன் அலி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்களை அனுப்பி விசாரணை நடத்தினர்.
இதில் உசேன்அலி மற்றும் அவரது குடும்பத்தினர் சொந்த ஊருக்கு தப்பிச் சென்றது தெரியவந்தது. அவர் பயன்படுத்தி வந்த செல்போன் மூலம் உறுதி செய்த சிவகாசி போலீசார் உசேன் அலி மற்றும் அவரது குடும்பத்தினரை பிடிக்க மேற்கு வங்க போலீசாரின் உதவியை நாடி உள்ளனர். மேற்கு வங்க போலீசாருக்கு உரிய தகவல்களை அனுப்பி உசேன்அலியை கைது செய்ய உதவுமாறு கோரி உள்ளனர். பின்னர் மேற்குவங்கத்தில் உள்ள ஹவுரா ரெயில்நிலையத்தில் வைத்து உசேன்அலி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களை போலீசார் பிடித்ததாக கூறப்படுகிறது.
கொலை குறித்து துப்புத்துலக்கி வந்த தனிப்படைகளில் ஒரு பிரிவினர் இன்ஸ்பெக்டர் தலைமையில் அசாம் மாநிலத்துக்கு சென்றனர். இவர்களுக்கு உசேன்அலி மற்றும் அவரது குடும்பத்தினர் அங்குள்ள போலீசாரிடம் சிக்கிய தகவல் கிடைத்துள்ளது. அதன்பின்னர் அவர்கள் மேற்குவங்கம் சென்று அங்கிருந்து உசேன்அலி மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்தவர்களை சிவகாசிக்கு ரெயில் மூலம் அழைத்து வர தேவையான ஏற்பாடு செய்துள்ளனர். இன்று(ஞாயிற்றுக்கிழமை) அல்லது நாளை அவர்கள் சிவகாசிக்கு வருவார்கள் என கூறப்படுகிறது.
தி.மு.க. பிரமுகர் செல்வம் கொலை வழக்கு தொடர்பாக ரெங்கசமுத்திரப்பட்டியை சேர்ந்த டிரைவர் ஒருவரை மாரனேரி போலீசார் சந்தேகத்தின் பேரில் அழைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவரிடம் இருந்து பெற்ற தகவல்களை கருத்தில் கொள்ளும் போது இந்த கொலை சம்பவத்தில் அவருக்கும் தொடர்பு இருக்கும் என போலீசார் உறுதியாக நம்புகிறார்கள். அந்த நபரை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் வடமாநில தொழிலாளி உசேன்அலி மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினால் மட்டுமே கொலைக்கான உண்மை காரணம் தெரியவரும் என்று விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.