சாதி, வருமானம், இருப்பிட சான்றிதழ்களை பெற செல்போன் மூலம் விண்ணப்பிக்க புதிய செயலி அறிமுகம்
சாதி, வருமானம், இருப்பிடம் ஆகிய சான்றிதழ்களை பெறுவதற்கு செல்போன் மூலம் விண்ணப்பிக்க புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளதாக கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் 97 பொது சேவை, இ–சேவை மையங்கள் மூலமாக வருவாய்த்துறையின் சாதி சான்றிதழ், இருப்பிட மற்றும் வருமான சான்றிதழ், சொத்து ஆவண சம்பந்தமான சான்றிதழ், கலப்பு திருமண சான்றிதழ், விதவை சான்றிதழ், கணவரால் கைவிடப்பட்டவர் சான்றிதழ் உள்ளிட்ட 20 வகையான சான்றிதழ்கள், பட்டா மாறுதல் மற்றும் சமூக நலத்துறை தொடர்பான சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இ–சேவை மையங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், வருவாய்த்துறையில் பெறப்படும் 20 சான்றிதழ்களை இணையதளம் மூலம் பொதுமக்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியே ஸ்மார்ட் போன் அல்லது கணினி மூலம் எளிதில் விண்ணப்பித்து சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம்.
வருவாய்த்துறை சான்றிதழ்களை பெற விரும்புவோர் www.tnesevai.tn.gov.in/citizen என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம். மேலும் மத்திய அரசின் உமாங் (யு.எம்.ஏ.என்.ஜி.) என்ற புதிய செயலியும் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த செயலியை செல்போனில் பதிவிறக்கம் செய்து, அதன் மூலம் சாதி, வருமானம், இருப்பிடம் ஆகிய சான்றிதழ்களை இந்த செயலி மூலம் விண்ணப்பித்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.