ரூ.740 கோடி செலவில் பில்லூர் 3–வது குடிநீர் திட்டத்தை நிறைவேற்றும் பணிகள் தீவிரம்
ரூ.740 கோடி செலவில் பில்லூர் 3–வது குடிநீர் திட்டத்தை நிறைவேற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கோவை,
கோவையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் பில்லூர் முதல் திட்டத்தை தமிழ்நாடு குடிநீர்வடிகால் வாரியமும், 2–வது குடிநீர் திட்டத்தை கோவை மாநகராட்சியும் நிறைவேற்றி தற்போது நடைமுறையில் உள்ளன. இந்த நிலையில் கோவையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் தற்போது பில்லூர் 3–வது குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது.
இது குறித்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:–
ரூ.740 கோடியே 15 லட்சம் செலவில் பில்லூர் 3–வது குடிநீர் திட்ட பணிகள் 3 கட்டங்களாக நிறைவேற்றப்பட உள்ளது. இதன் முதல் கட்டமாக மேட்டுப்பாளையம் அருகே பவானி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்துச் செல்ல சுத்திகரிப்பு நிலையத்துக்கு குழாய்கள் அமைக்கப்படுகிறது. 2–ம் கட்டமாக சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளது.
பவானி ஆற்றில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர் கட்டன்மலை குகை வழியாக 16½ கிலோ மீட்டர் தூரத்துக்கு குழாய்கள் மூலம் சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. சுத்திகரிப்பு நிலையம் கோவையை அடுத்த மருதூர் ஊராட்சி ஒன்றியம் தண்டிபெருமாள்புரம் என்ற கிராமத்தில் அமைக்கப்பட உள்ளது. அங்கு குடிநீர் சுத்திகரிக்கப்பட்ட பின்னர் தூய்மையான தண்ணீர் பிரதான குடிநீர் தொட்டிக்கு வருகிறது.
இதற்காக கோவையை அடுத்த பன்னிமடை கிராமத்தில் ரூ.1 கோடியே 46 லட்சம் செலவில் பிரதான தொட்டி கட்டப்பட உள்ளது. அதில் இருந்து 56 கிலோ மீட்டர் தூரத்துக்கு குழாய்கள் பதிக்கப்பட்டு 6 பெரிய தொட்டிகளில் தண்ணீர் நிரப்பப்படும். அங்கிருந்து கோவை மாநகராட்சி குடிநீர் வினியோக பணியை மேற்கொள்கிறது. இதற்காக வளர்மதிநகர், துடியலூர், பிள்ளையார்புரம், குறிச்சி, பிரஸ் என்கிளேவ், குனியமுத்தூர் ஆகிய இடங்களில் ராட்சத தொட்டிகள் கட்டப்பட்டு வருகின்றன.
பில்லூர் அணையில் இருந்து எடுக்கப்படும் பில்லூர் முதல் மற்றும் 2–வது திட்ட குடிநீர் ஏற்கனவே கட்டன் மலையை குடைந்து அதில் அமைக்கப்பட்டுள்ள குகை வழியாக கொண்டு வரப்படுகிறது. இந்த நிலையில் பில்லூர் 3–வது குடிநீர்த் திட்டத்துக்கு அதன் வழியாக தண்ணீர் கொண்டு வரமுடியாது என்பதால் கட்டன் மலையை 900 மீட்டர் நீளத்துக்கு குடைந்து 3–வது குடிநீர் திட்டத்துக்காக 2–வதாக ஒரு குகை அமைக்கப்பட உள்ளது.
பில்லூர் 3–வது குடிநீர் திட்டத்துக்கு 162 ஏக்கர் நிலம் தேவை. இதில் 125 ஏக்கர் 1027 தனி நபர்க ளுக்கு சொந்தமானது ஆகும். அந்த நபர்களிடம் இருந்து நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்டு குழாய்கள் பதிக்கப்பட உள்ளன. மீதி உள்ள 36 ஏக்கர் நிலம் மாநில அரசுக்கு சொந்தமானது. எனவே அதை ஆர்ஜிதம் செய்வதில் எந்த சிக்கலும் இருக்காது.
ஆர்ஜிதம் செய்யப்படும் நிலத்துக்கான மதிப்பை நிர்ணயம் செய்வதற்காக ஒரு குழு அமைக்கப்பட உள்ளது. அந்த குழு தான் ஆர்ஜிதம் செய்யும் நிலத்திற்கான விலையை நிர்ணயம் செய்யும். அந்த குழுவில் சப்–கலெக்டர், 2 மாநகராட்சி என்ஜினீயர்கள், 2 தாசில்தார்கள் மற்றும் உறுப்பினர்கள் இடம் பெறுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.