அரசு பள்ளிகளில் புத்தகம் வாசிப்பு மாதம் கடைபிடிப்பு மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்


அரசு பள்ளிகளில் புத்தகம் வாசிப்பு மாதம் கடைபிடிப்பு மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்
x
தினத்தந்தி 4 Aug 2018 10:45 PM GMT (Updated: 4 Aug 2018 7:10 PM GMT)

வடவாளம், விராலிமலை அரசு பள்ளிகளில் புத்தகம் வாசிப்பு மாதம் கடைபிடிக்கப்பட்டது. இதில் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

புதுக்கோட்டை,

பள்ளி மாணவர்கள் புத்தக வாசிப்பு திறனை வளர்த்து கொள்ளும் பொருட்டு அரசு பள்ளிகளில் வாசிப்பு மாதம் கடைபிடிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதனடிப்படையில் வடவாளம் ஊர்ப்புற நூலகம் சார்பில் வடவாளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் புத்தக வாசிப்பு மாதம் கடைபிடிக்கப்பட்டது. இதில் தலைமை ஆசிரியை புஷ்பலதா தலைமை தாங்கி, புத்தகம் வாசிப்பின் அவசியம் குறித்து பேசுகையில், 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள ஒவ்வொரு வகுப்பு மாணவர்களுக்கும் வாசிப்புக்காக ஒரு பாடவேளை ஒதுக்கப்படும். புத்தகங்களை வாசித்து முடித்த பின்னர் அதுதொடர்பாக மாணவர்களுக்கு பேச்சு, கவிதை, கட்டுரை போட்டிகள் நடத்தப்படும் என்றார். இதற்கான ஏற்பாடுகளை நூலகர் மேரி செய்திருந்தார்.

விராலிமலை கிளை நூலகத்தின் சார்பில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் புத்தக வாசிப்பு மாதம் கடைபிடிக்கப்பட்டது. இதற்கு விராலிமலை பெண்கள் மேல்நிலைப்பள்ளி துணை தலைமை ஆசிரியை ரெஜினா தலைமை தாங்கினார். முதுகலை ஆசிரியர் ரமா முன்னிலை வகித்தார். இதில் வாசகர் வட்ட தலைவர் கவிஞர் சவுமா கலந்துகொண்டு பேசினார். இதில் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகி கந்தசாமி ஆசிரியைகள் உட்பட 6, 7, 8 மற்றும் 9-ம் வகுப்பு மாணவிகள் கலந்துகொண்டனர். முடிவில் நூலகர் ஜெயராஜ் நன்றி கூறினார். 

Next Story