தமிழ்மொழியை நிலை நிறுத்தியதில் திராவிட இயக்கங்களுக்கு பெரும் பங்குண்டு கவிஞர் வைரமுத்து பேச்சு


தமிழ்மொழியை நிலை நிறுத்தியதில் திராவிட இயக்கங்களுக்கு பெரும் பங்குண்டு கவிஞர் வைரமுத்து பேச்சு
x
தினத்தந்தி 4 Aug 2018 10:45 PM GMT (Updated: 4 Aug 2018 8:01 PM GMT)

தமிழ்மொழியை நிலை நிறுத்தியதில் திராவிட இயக்கங்களுக்கு பெரும் பங்குண்டு என்று தர்ம புரியில் நடந்த புத்தக திருவிழா சிறப்பு கருத்தரங்கில் கவிஞர் வைரமுத்து பேசினார்.

தர்மபுரி,

தர்மபுரி மதுராபாய் திருமண மண்டபத்தில் புத்தக திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி நடந்த சிறப்பு கருத்தரங்கிற்கு பச்சமுத்து கல்வி நிறுவனங்களின் தாளாளர் பாஸ்கர் தலைமை தாங்கினார். ஓய்வு பெற்ற மாவட்ட கல்வி அலுவலர் ராஜசேகரன் வரவேற்றார். கவிஞர் ஜெயபாஸ்கரன், பச்சமுத்து கல்லூரி முதல்வர் இன்னிசை, ஆசிரியர் பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் வருவான் வடிவேலன் கல்லூரி தாளாளர் வருவான் வடிவேலன், பி.சி.ஆர். பள்ளி தாளாளர் பி.சி.ஆர். மனோகரன், புத்தக திருவிழா தலைவர் முன்னாள் எம்.பி. டாக்டர் செந்தில் ஆகியோர் வாழ்த்தி பேசினர். இதில் தர்மபுரியில் நடைபெற்று வரும் புத்தக திருவிழாவில் ‘தமிழுக்கு அமுதென்று பேர்‘ என்ற தலைப்பில் நேற்று இரவு சிறப்பு கருத்தரங்கு நடைபெற்றது. இதில் கவிஞர் வைரமுத்து கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

இந்த புத்தக திருவிழாவில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் பங்கேற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அமுதை உண்டால் நீண்டகாலம் இளமையோடு வாழலாம் என்பது கருத்தியல். தமிழ்மொழியிலும் அந்த அமுதம் போன்ற இனிமையும், இளமையும் உள்ளது. தமிழ்மொழியில் உள்ள ஓசைகள் நுரையீரலை ஆரோக்கியமாக இயங்க வைக்கும் ஆற்றல் படைத்தவை. இனிமேல் நண்பர்கள் நேரில் சந்தித்தால் கடைசியாக என்ன புத்தகம் படித்தீர்கள்?, கடைசியாக என்ன பாட்டு பாடினீர்கள்? என்று கேட்டுக்கொள்ள வேண்டும். கடைசியாக படித்த புத்தகம் நமது அறிவின் விசாலத்தை வெளிப்படுத்தும்.

அதேபோல் பாடல் நிகழ்காலத்தில் மனிதனை நிலைநிறுத்தும். பாடுபவர்கள் இயற்கையோடு ஒன்றி வாழ்வார்கள். அவர்களுக்கு மன அழுத்தம் இருக்காது. தமிழ்மொழியில் வீரம்,காதல், கவிதை, தத்துவம், விஞ்ஞானம், மெய்ஞானம் என வாழ்க்கையின் அனைத்து தத்துவங்களும் அடங்கி இருக்கின்றன. தமிழ்மொழியை போராட்டத்தின் மூலம் நிலைநிறுத்தியதில் திராவிட இயக்கங்களுக்கு பெரும் பங்குண்டு.

தமிழ் மொழியின் சிறப்பை நிலைநாட்ட தமிழர்கள் தமிழ்நாட்டுக்கு வெளியே போராட வேண்டும். ஆட்சி மொழிகளில் ஒன்றாக அதிகார பீடத்தில் தமிழை அமர செய்வதன் மூலம் தமிழர்கள் தமிழால் ஆளப்படும் நிலையை உருவாக்க முடியும். கல்வியை தாய்மொழியான தமிழில் கற்க வேண்டும். ஆங்கில மொழியையும் சிறப்பாக கற்று தேர்ச்சி பெற வேண்டும்.

தமிழ்மொழி மட்டுமின்றி இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மொழிகள் அனைத்திற்கும் ஆட்சிமொழி அந்தஸ்து கிடைக்க வேண்டும். தமிழ்மொழி எப்போதும் தன்னை புதுப்பித்து கொண்டே உள்ளது. அடுத்த நூற்றாண்டில் அழியும் என்ற யுனஸ்கோவின் கூற்றை தமிழ்மொழி பொய்யாக்கும். எனது கூற்றுப்படி இந்தியாவில் தமிழ், இந்தி ஆகிய 2 மொழிகள் இன்னும் மிக நீண்ட காலம் உயிர்ப்புடன் வாழும்.

இவ்வாறு கவிஞர் வைரமுத்து பேசினார்.

முடிவில் கவிஞர் நவகவி நன்றி கூறினார். 

Next Story