வில்லியனூர் லூர்து அன்னை ஆலய குளத்தில் பிரான்சிலிருந்து கொண்டு வரப்பட்ட புனிதநீர் ஊற்றப்பட்டது


வில்லியனூர் லூர்து அன்னை ஆலய குளத்தில் பிரான்சிலிருந்து கொண்டு வரப்பட்ட புனிதநீர் ஊற்றப்பட்டது
x
தினத்தந்தி 5 Aug 2018 3:00 AM IST (Updated: 5 Aug 2018 1:42 AM IST)
t-max-icont-min-icon

வில்லியனூரில் அமைந்துள்ள பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற லூர்து மாதா ஆலய குளத்தில், பிரான்ஸ் நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட புனிதநீர் ஊற்றப்பட்டது.

வில்லியனூர்,

புதுச்சேரி மாநிலம் வில்லியனூரில் அமைந்துள்ள தூய லூர்தன்னை ஆலயம் 142 ஆண்டுகள் பழமைவாய்ந்தது. தமிழர் பண்பாட்டின்படி ஆலயத்திற்கு முன்பாக குளம் அமைந்திருப்பது இதன் தனிச்சிறப்பாகும். இயற்கையாக அமைந்துள்ள இந்த மாதா குளத்தின் கரைகள் 1924ம் ஆண்டு கட்டப்பட்டது.

இந்த குளத்தின் புனித நீரை பயன்படுத்தும் பக்தர்கள் கண் நோய். தோல் வியாதிகள் மற்றும் பலவிதமான நோய்களில் இருந்து குணமாகி வருவதாக ஐதீகம். மேலும் வில்லியனூர் மாதா குளத்தை தொடர்ச்சியாக 9 சனிக்கிழமைகளில் பக்தியோடு சுற்றி வந்து ஜெபிக்கும் பக்தர்களின் வேண்டுதல்கள் நிறைவேறி வருவதாகவும் பக்தர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

பிரான்ஸ் நாட்டில் உள்ள லூர்து நகரில் பெர்னதெத் என்ற சிறுமிக்கு மாதா காட்சி கொடுத்த மசபியேல் என்ற குகையின் அற்புத சுனையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் புனித நீர் கொண்டு வரப்பட்டு வில்லியனூர் மாதா குளத்தில் கலக்கப்பட்டு வருகிறது.

அதேபோல் இந்த ஆண்டும் வில்லியனூர் மாதா குளத்தில் புனிதநீர் கலக்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. அதற்காக பிரான்ஸ் நாட்டின் லூர்து நகரில் இருந்து புனித நீர் கொண்டு வரப்பட்டது. புனிதநீர் கலக்கும் நிகழ்ச்சியையொட்டி நேற்று காலை 5–30 மணிக்கு மாதா கோவிலில் திருப்பலி பூநை நடைபெற்றது. அதனை தொடர்ந்து மாதா குளத்தை சுற்றி சிறிய தேர்பவனி நடைபெற்றது. பின்னர் காலை 6–45 மணிக்கும் 11–30 மணிக்கு சிறப்பு திருப்பலிகள் நடந்தது

அதன் தொடர்ச்சியாக மாலை 5–30 மணிக்கு சென்னை – மயிலை உயர்மறைமாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி தலைமையில் சிறப்புக் கூட்டு திருப்பலிக்கு பூஜை நடந்தது. அதன் பின்னர், பிரான்ஸ் லூர்து நகரில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ள புனித நீர் வில்லியனூர் மாதா குளத்தில் ஊற்றும் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து இரவு 7–30 மணிக்கு லூர்து அன்னையின் ஆடம்பர தேர்பவனி நடைபெற்றது. நிகழ்ச்சியையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவுக்கான ற்பாடுகளை வில்லியனூர் தூய லூர்து அன்னை ஆலய பங்குத்தந்தை பிச்சைமுத்து தலைமையில் உதவி பங்குத்தந்தை வின்சென்ட் அமல்ராஜ் மற்றும் பங்கு பேரவையினர், இளைஞர் இயக்கத்தினர் செய்திருந்தனர்.


Next Story