கூனிச்சம்பட்டு கிராமத்தில் 2–வது நாளாக பதற்றம் நீடிப்பு: கலவரத்தை தூண்டியதாக இரு தரப்பினர் மீதும் வழக்கு பதிவு
திருக்கனூர் அருகே கூனிச்சம்பட்டு கிராமத்தில் கோவில் நுழைவு போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையில் அங்கு 2–வது நாளாக நேற்றும் பதற்றமான சூழ்நிலை நிலவியது.
திருக்கனூர்,
திருக்கனூர் அருகே கூனிச்சம்பட்டு கிராமத்தில் கோவில் நுழைவு போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையில் நேற்று போலீசார் கலவரத்தை தூண்டியதாக இரு தரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். இந்த பிரச்சினையில் அங்கு 2–வது நாளாக நேற்றும் பதற்றமான சூழ்நிலை நிலவியது.
திருக்கனூர் அருகே கூனிச்சம்பட்டு கிராமத்தில் பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 6 மாதத்துக்கு முன்பு ஒரு தரப்பினர் சாமி கும்பிட மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததாக பிரச்சினை எழுந்தது. அப்போது அதிகாரிகள நடவடிக்கை எடுத்து இரு தரப்பையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்தனர்.
இந்த சூழ்நிலையில் நேற்று முன்தினம் ஆடிமாத வெள்ளிக்கிழமையையொட்டி இந்த கோவிலுக்குள் ஆலய நுழைவு போராட்டம் நடத்தப்படும் என்று புதுச்சேரி மாநில அம்பேத்கர் தீண்டாமை ஒழிப்பு மற்றும் உரிமை இயக்கத்தினர் அறிவித்து நோட்டீசு அடித்தனர். தற்போது எந்த பிரச்சினையும் இல்லாமல் அனைவரும் கோவிலுக்கு சென்று சாமிகும்பிட்டு வரும் இந்த சூழ்நிலையில் ஆலாய நுழைவு போராட்டம் என நோட்டீசு அடித்தற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் ஆலய நுழைவு போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் 500–க்கும் மேற்பட்டவர்கள் கோவிலுக்கு திரண்டு வந்து கோவில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் அங்கு பதற்றமான சூழ்நிலையும், இரு தரப்பினரிடையே மோதல் ஏற்படும் சூழ்நிலையும் எழுந்தது.
அதைத் தொடர்ந்து புதுச்சேரி மாநில சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வ குப்தா தலைமையில் போலீசார் வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதன் பின்னர் கோவில் முன்பு திரண்ட மக்களை கலைக்க போலீசார் லேசான தடியடி நடத்தினார்கள்.
பின்னர் புதுச்சேரி மாவட்ட கலெக்டர் சவுத்ரி அபிஜித் விஜய் மற்றும் போலீஸ் ஐ.ஜி.சுரேந்தர்சிங் யாதவ் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதில் முடிவு எடுக்கப்பட்டதை தொடர்ந்து ஆலய நுழைவு போராட்டம் அறிவித்தவர்கள் தரப்பை சேர்ந்தவர்கள் கோவிலுக்குள் சென்று சாமி கும்பிட அனுமதிக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்றுக்காலை வரை தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பில் ஈடுபட்டனர். இருந்தபோதிலும் இந்த பிரச்சினை காரணமாக கூனிச்சம்பட்டு கிராமத்தில் நேற்று 2–வது நாளாக மோதல், அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்கும் விதமாக போலீசார் பலத்த பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே கோவில் வழிபாடு பிரச்சினையில் அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், கலவரத்தை தூண்டுதல், கும்பல் சேர்த்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இரு தரப்பினர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஒவ்வொரு தரப்பிலும் 50–க்கும் மேற்பட்டவர்கள் என குறிப்பிட்டு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த தகவல் பரவியதும் கூனிச்சம்பட்டு கிராம மக்கள் மத்தியில் நேற்று பதற்றம் ஏற்பட்டது. நேற்று முன்தினமே இந்த ஆலய வழிபாட்டு பிரச்சினைக்கு அதிகாரிகள் இரு தரப்பையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமான முடிவு ஏற்படுத்திய நிலையில் தற்போது வழக்கு பதிவு செய்துள்ளது கிராம மக்கள் மத்தியில் அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.