மாவட்டத்தில் குற்றங்களை தடுக்க 11 இடங்களில் கண்காணிப்பு கேமரா அமைச்சர் தொடங்கி வைத்தார்


மாவட்டத்தில் குற்றங்களை தடுக்க 11 இடங்களில் கண்காணிப்பு கேமரா அமைச்சர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 5 Aug 2018 4:15 AM IST (Updated: 5 Aug 2018 1:48 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் குற்றங்களை தடுக்கவும், வாகன போக்குவரத்தை கண்காணிக்கவும் 11 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. இவற்றின் இயக்கத்தை அமைச்சர் தங்கமணி நேற்று தொடங்கி வைத்தார்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டத்தில் குற்றங்களை தடுக்கவும், வாகன போக்குவரத்தை கண்காணிக்கவும் காவல்துறை சார்பில் 11 இடங்களில் 66 கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. இந்த கண்காணிப்பு கேமராக்கள் அனைத்தும் போலீஸ் நிலையம் மற்றும் கட்டுப்பாட்டு அறைகளில் இருந்தும், ஆன்லைனில் செல்போனில் பார்க்கும் வகையிலும் அமைக்கப்பட்டு உள்ளது. இவற்றின் இயக்கத்தை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி நேற்று நாமக்கல்லில் தொடங்கி வைத்தார்.

தமிழக அரசிடம் இருந்து நாமக்கல் மாவட்ட சாலை பாதுகாப்புக்கு ரூ.58 லட்சம் நிதி பெறப்பட்டு இருப்பதாகவும், அவற்றில் கொல்லிமலை மலைப்பாதையில் விபத்தை தடுக்க பிரதிபளிப்பு குவியாடி கண்ணாடிகள் வைக்கப்பட்டு இருப்பதாகவும், குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளில் தானியங்கி சிக்னல் அமைக்கப்பட்டு இருப்பதாகவும் போலீஸ் அதிகாரிகள் கூறினர். மேலும் பொம்மைகுட்டைமேடு மற்றும் கத்தேரி பிரிவு சாலை உள்ளிட்ட பகுதிகளில் அதிவேக பிரதிபலிப்பான் அமைக்கப்பட்டு இருப்பதாகவும் அவர்கள் கூறினர்.

இதேபோல் நாமக்கல் நகர போலீஸ் நிலைய வளாகத்தில் போட்டித் தேர்வுகளுக்கான நூலகம் தொடங்கப்பட்டு உள்ளது. இதையும் அமைச்சர் தங்கமணி நேற்று திறந்து வைத்தார். தமிழக அரசால் சிறார் மன்றத்திற்காக வழங்கப்பட்ட நிதியில் ரூ.1 லட்சம் மதிப்பில் போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்கள் வாங்கப்பட்டு, இங்கு வைக்கப்பட்டு இருப்பதாகவும், இந்த நூலகம் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும் எனவும் போலீசார் தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சிகளில் கலெக்டர் ஆசியா மரியம், சேலம் சரக டி.ஐ.ஜி. செந்தில்குமார், போலீஸ் சூப்பிரண்டு அருளரசு, பி.ஆர்.சுந்தரம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கே.பி.பி.பாஸ்கர், சந்திரசேகரன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் செந்தில், சுஜாதா மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டுகள், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர். 

Next Story