பறிமுதல் செய்யப்பட்ட மணல் மீண்டும் கடத்தல்: பெண் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு இடமாற்றம்
கடத்தலில் பறிமுதல் செய்யப்பட்ட மணல் மீண்டும் கடத்தப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய பெண் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டரை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து சூப்பிரண்டு சரவணன் உத்தரவிட்டார்.
கடலூர்,
மணல் கடத்தல் மற்றும் குற்ற செயல்களை தடுக்கும் வகையில் கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி போலீசார் அப்பகுதியில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மணல் ஏற்றி வந்த டிராக்டரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர்.
அப்போது சோழத்தரம் போலீஸ் நிலையத்தில் இருந்து மணலை ஏற்றி வந்ததாக டிராக்டரை ஓட்டி வந்த டிரைவர் தெரிவித்தார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், டிரைவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், சோழத்தரம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மணல் கடத்தி வந்த லாரி, மாட்டு வண்டிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்து போலீஸ் நிலைய வளாகத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். அந்த மாட்டுவண்டிகளில் இருந்த மணலை டிராக்டரில் ஏற்றி கடலூருக்கு கடத்தி வரும் வழியில் போலீசாரின் சோதனையில் சிக்கியதும், இதற்கு சோழத்தரம் சப்–இன்ஸ்பெக்டர் மகேஸ்வரிக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்தது.
இந்த சம்பவம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணனின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட சப்–இன்ஸ்பெக்டர் மகேஸ்வரியை கடலூர் ஆயுதப்படை போலீஸ் பிரிவுக்கு இடமாற்றம் செய்து சூப்பிரண்டு சரவணன் உத்தரவிட்டார்.