8 மாத இடைவெளிக்கு பிறகு முல்லைப்பெரியாறு அணையில் மூவர் கண்காணிப்பு குழுவினர் ஆய்வு
முல்லைப்பெரியாறு அணையில் 8 மாத இடைவெளிக்கு பிறகு மூவர் கண்காணிப்பு குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர்.
தேனி,
தமிழக–கேரள மாநில எல்லையில் குமுளி அருகே முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீராதாரமாக இந்த அணை திகழ்கிறது. கடந்த சில தினங்களாக கேரள மாநிலத்தில் பருவமழை பெய்து வருவதால் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து உள்ளது. அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 152 அடியாகும். நேற்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 134.25 அடியாக இருந்தது.
அணையில் 142 அடி வரை நீரை தேக்கிக்கொள்ள சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்து தீர்ப்பு வழங்கி உள்ளது. அணையில் நீர்மட்டம் உயர்வதை கண்காணிக்கவும், அணையின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்பார்வை செய்து தேவையான ஆலோசனை வழங்கவும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி கடந்த 2014–ம் ஆண்டு மூவர் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது.
மத்திய அரசு பிரதிநிதி தலைமையில், தமிழகம் மற்றும் கேரள மாநிலத்தில் இருந்து தலா ஒரு பிரதிநிதிகள் என மொத்தம் 3 பேர் இந்த கண்காணிப்பு குழுவில் உள்ளனர். மூவர் கண்காணிப்பு குழுவினர் பருவமழை காலங்களில் அணையை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்வது வழக்கம். அதன்படி கடந்த ஆண்டு நவம்பர் 20–ந் தேதி அணையில் ஆய்வு செய்தனர். இதையடுத்து 8 மாதங்கள் இடைவெளிக்கு பிறகு அணையில் இந்த குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வுக்காக கண்காணிப்பு குழு தலைவரான மத்திய நீர்வள ஆணையத்தின் தலைமை பொறியாளர் குல்சன்ராஜ், தமிழக பிரதிநிதியான தமிழக பொதுப்பணித்துறை கூடுதல் அரசு செயலாளர் பிரபாகரன், கேரள பிரதிநிதியான கேரள நீர்வள ஆதார அமைப்பு செயலாளர் டிங்கு பிஸ்வால் மற்றும் கேரள நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள், தமிழக அதிகாரிகள் ஆகியோர் ஜீப்கள் மூலம் வல்லக்கடவு பாதை வழியாக அணைக்கு சென்றனர்.
கண்காணிப்பு குழுவினர் வல்லக்கடவு பாதை வழியாக அணைக்கு செல்வது இதுவே முதல் முறையாகும். வல்லக்கடவு பாதையில் சாலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக உள்ளது. இதனால், அங்கு சாலை அமைப்பது தொடர்பாக மூவர் குழுவினர் ஆய்வு செய்தனர்.
அதன்பிறகு இக்குழுவினர் முல்லைப்பெரியாறு அணை, பேபி அணை ஆகிய பகுதிகளில் சுமார் அரை மணி நேரம் ஆய்வு மேற்கொண்டனர். ஆனால் அணையில் உள்ள மதகுகளை பார்வையிடவில்லை. பின்னர் ஆய்வை முடித்துக்கொண்டு குமுளிக்கு திரும்பினர். அதைத் தொடர்ந்து குமுளி 1–ம் மைல் பகுதியில் உள்ள கண்காணிப்பு குழு அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடந்தது. இதில் இரு மாநில அதிகாரிகள் கலந்துகொண்டனர்.