மெட்ரோ ரெயில்பாதை, மேம்பாலங்கள் உள்ளிட்ட பெங்களூரு நகர வளர்ச்சி பணிக்கு ராணுவ நிலம் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
பெங்களூருவில் மெட்ரோ ரெயில்பாதை, மேம்பாலங்கள் மற்றும் சாலை விரிவாக்கம் உள்ளிட்ட வளர்ச்சி பணிகளுக்காக ராணுவ நிலத்தை ஒதுக்கி ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் உத்தரவிட்டு உள்ளார்.
பெங்களூரு,
பெங்களூருவில் மெட்ரோ ரெயில்பாதை, மேம்பாலங்கள் மற்றும் சாலை விரிவாக்கம் உள்ளிட்ட வளர்ச்சி பணிகளுக்காக ராணுவ நிலத்தை ஒதுக்கி ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் உத்தரவிட்டு உள்ளார்.
பெங்களூரு நகரம் அசுர வேகத்தில் வளர்ச்சி கண்டு வருகிறது.
ராணுவ நிலம்
பெங்களூரு நகரின் வளர்ச்சிக்கு ஏற்ப மக்கள் தொகை பெருக்கம், போக்குவரத்து நெரிசல், அடிப்படை கட்டமைப்பு வசதிகளின் தேவையும் அதிகரித்து உள்ளது. அதனால் நகரில் சாலை அமைத்தல், விரிவுப்படுத்தல், மேம்பாலங்கள் அமைத்தல், மெட்ரோ ரெயில் பாதை அமைத்தல் உள்ளிட்ட வளர்ச்சி பணிகளை நிறைவேற்ற வேண்டி உள்ளது. அதற்கு ராணுவத்திற்கு சொந்தமான நிலம் நகரின் பல்வேறு இடங்களில் வளர்ச்சி பணிகளை நிறைவேற்ற தேவைப்படுகிறது.
வளர்ச்சி பணிகளை நிறைவேற்ற ராணுவத்துக்கு சொந்தமான நிலத்தை கர்நாடக அரசுக்கு வழங்க வேண்டும் என்று மத்திய ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமனிடம், முதல்-மந்திரி குமாரசாமி கோரிக்கை விடுத்திருந்தார். இதுதொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று பெங்களூருவுக்கு வந்திருந்தார்.
ஆலோசனை கூட்டம்
அதன்படி விதானசவுதாவில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனும், முதல்-மந்திரி குமாரசாமியும் சந்தித்து பேசினார்கள். இந்த ஆலோசனை கூட்டத்தில் அரசு அதிகாரிகளும் பங்கேற்றனர். அப்போது பெங்களூருவில் மெட்ரோ ரெயில் பாதை, சாலை அமைத்தல், சாலையை விரிக்கம் உள்ளிட்ட 10 விதமான வளர்ச்சி பணிகளுக்கு எந்தெந்த இடங்களில் ராணுவத்திற்கு சொந்தமான நிலம் தேவை என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
பின்னர் கர்நாடக அரசுக்கு தேவைப்படும் இடங்களில் ராணுவத்துக்கு சொந்தமான நிலத்தை வழங்க மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் ஒப்புதல் அளித்து அறிவித்தார்.
பின்னர் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், ராணுவத்துறை சார்பில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் விமான கண்காட்சியை பெங்களூருவில் இருந்து வேறு மாநிலத்திற்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதா? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-
இறுதி முடிவு எடுக்கவில்லை
“ராணுவத்துறை சார்பில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை விமான கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. கடந்த முறை பெங்களூரு எலகங்காவில் விமான கண்காட்சி நடைபெற்றது. அடுத்த ஆண்டு(2019) நடைபெறும் விமான கண்காட்சியை தங்களது மாநிலத்தில் நடத்த வேண்டும் என்று பல்வேறு மாநிலத்தினர் ராணுவத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனால் 2019-ம் ஆண்டு நடைபெறும் விமான கண்காட்சியை எங்கு நடத்துவது என்பது குறித்து ராணுவத்துறை இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை. அதற்கான தேதி, இடம் குறித்து ராணுவத்துறை சார்பில் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. அதுகுறித்து விரைவில் முடிவு எடுத்து அறிவிக்கப்படும்.
அதிகாரிகளுக்கு உத்தரவு
பெங்களூரு நகரில் பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கு ராணுவ நிலத்தை வழங்க வேண்டும் என்று முதல்-மந்திரி குமாரசாமி கோரிக்கை விடுத்திருந்தார். சாலை அமைத்தல், சாலையை விரிவுப்படுத்தல் உள்ளிட்ட வளர்ச்சி பணிகளுக்காக பெங்களூருவில் ராணுவத்திற்கு சொந்தமான நிலம் மாநகராட்சிக்கு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டு இருக்கிறது. அதற்கு நிகரான நிலம் பெங்களூரு மாநகராட்சி சார்பில் ராணுவத்திற்கு வழங்கப்படும். அதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
கர்நாடகத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் பெங்களூரு நகரில் நடைபெறும் வளர்ச்சி திட்டங்களுக்கு மட்டும் ராணுவ நிலத்தை வழங்குவது குறித்து அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ராணுவத்திற்கு சொந்தமான நிலத்தை வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். கர்நாடகத்தில் இருந்து நான் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக ஆனேன். அந்த அதிர்ஷ்டத்தால் மத்திய ராணுவ மந்திரியாகி உள்ளேன்.”
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story