கலசபாக்கம் அருகே நடந்த இளம்பெண் தற்கொலை வழக்கில் கணவன்-மாமியார் கைது


கலசபாக்கம் அருகே நடந்த இளம்பெண் தற்கொலை வழக்கில் கணவன்-மாமியார் கைது
x
தினத்தந்தி 5 Aug 2018 3:45 AM IST (Updated: 5 Aug 2018 2:33 AM IST)
t-max-icont-min-icon

கலசபாக்கம் அருகே நடந்த இளம்பெண் தற்கொலை வழக்கில், ரூ.30 லட்சம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக அவருடைய கணவன், மாமியார் கைது செய்யப்பட்டனர்.

கலசபாக்கம்,

கலசப்பாக்கத்தை அடுத்த கேட்டவரம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் மைதிலி (வயது 48). இவரது மகன் டெல்லி பாபு (25). ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி சுஜி (19). இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு, சோமாசிபாடி கிராமத்திற்கு சென்று தங்கினர். கடந்த 30-ந் தேதி கேட்டவரம் பாளையத்திற்கு டெல்லிபாபு, மனைவி சுஜியை அழைத்து வந்தார். அங்குள்ள அக்காள் வீட்டில் இருவரும் தங்கினர்.

அன்று இரவு அதே பகுதியில் உள்ள குளத்தில் குதித்து சுஜி தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக கடலாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவன் டெல்லிபாபுவை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ரூ.30 லட்சம் வரதட்சணை கேட்டு சுஜியை டெல்லி பாபுவும், அவருடைய தாய் மைதிலியும் கொடுமைப்படுத்தியது தெரியவந்தது. கணவன்- மாமியார் கொடுமை குறித்து சுஜி தனது பெற்றோரிடம் கூறியிருக்கிறார்.

இதனால் அவருடைய பெற்றோர், சென்னையில் உள்ள வீட்டை விற்று ரூ.14 லட்சத்தை கொடுத்தனர். ஆனாலும், டெல்லி பாபு சொந்த தொழில் தொடங்குவதற்கு மீதி ரூ.16 லட்சத்தை கேட்டு மனைவியை தொடர்ந்து சித்ரவதை செய்துள்ளார்.

சம்பவத்தன்று இரவும், உறவினர்கள் முன்னிலையில் மனைவியை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சுஜி, அங்குள்ள நல்ல தண்ணி குளத்தில் குதித்து தற்கொலை செய்துள்ளார்.

அவரை பின்தொடர்ந்து சென்ற டெல்லிபாபு நீச்சல் தெரிந்தும், மனைவியை காப்பாற்றவில்லை என்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, வரதட்சணை கொடுமை, தற்கொலைக்கு தூண்டியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், சுஜியின் கணவர் டெல்லிபாபு மற்றும் மாமியார் மைதிலிஆகிய இருவரையும் கைது செய்தனர். 

Next Story