ஆபத்தில் உதவுவதுதானே நட்பு...!


ஆபத்தில் உதவுவதுதானே நட்பு...!
x
தினத்தந்தி 5 Aug 2018 12:47 PM IST (Updated: 5 Aug 2018 12:47 PM IST)
t-max-icont-min-icon

இந்த உலகில் விலைமதிப்பில்லாத ஒரு உறவு என்றால், அது நட்பு தான்.

இணைய தளமும், சமூக வலைத்தளமும் எளிதானப் பின்பு நாம் அனைவரும் ஆகஸ்டு முதல் ஞாயிற்றுக்கிழமையை நண்பர்கள் தினமாக கொண்டாடுகிறோம். ஆனால் இது டாக்டர் ராமன் ஆர்ட்டினியோ என்பவருக்கு 1958-ம் ஆண்டு ஜூலை மாதம் உதித்த எண்ணம். அவர் பராகுவே நதி அருகில் புரிட்டோ பினாஸ்கோ என்ற இடத்தில் நண்பர்களுடன் உணவருந்திக் கொண்டிருந்தார்.

அப்போது, நாம் ஏன் ஒவ்வொரு ஆண்டும் நம் நண்பர்களை குறிப்பிட்ட நாளில் சந்திக்கக்கூடாது? அந்த நாளை ஏன் நண்பர்கள் தினமாக கொண்டாடக்கூடாது? என எண்ணினார்.

இந்த விருப்பத்தை 1958-ம் ஆண்டு ஜூலை 30-ந்தேதி சர்வதேச நண்பர்கள் தினமாக கொண்டாட அறிவுறித்தினார். அது ஐக்கிய நாடுகளின் பொது சட்டசபையில் ஏற்றுக்கொள்ளப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்தியா உள்ளிட்ட சில ஆசிய நாடுகள் ஆகஸ்டு மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையை நண்பர்கள் தினமாக கொண்டாடுகிறது.

நல்ல புத்தகம் ஒரு நண்பனுக்குச் சமம், ஆனால் ஒரு நல்ல நண்பனோ ஒரு நூலகத்திற்கு சமம் என்று நட்பின் மேன்மையை பறைசாற்றியவர், அப்துல்கலாம். நட்புக்கு ஆண், பெண் வேறுபாடு, ஜாதி, மத பேதம், சமூக அந்தஸ்து என எதுவும் கிடையாது. அனைத்து மதங்களும் போதிப்பது நட்பையும், அன்பையும் தான்.

இந்து, கிறிஸ்தவம், முஸ்லிம் என அனைத்து மதங்களும் போதிப்பது நட்பைதான். ஒருவரோடு ஒருவர் நட்பு பாராட்ட வேண்டும் என்பதை தான் மதங்கள் வலியுறுத்துகின்றன.

இன்றைக்கு கனவுலகில் காதல் கோட்டை கட்டுகிறோம். சமூகவலைத்தளத்தில் மாற்று பாலினத்தாரின் அழகில் மயங்கி காதல் வயப்படுகிறோம்.

ஆனால் அன்று முடி ஆட்சி நடந்தபோது நீடித்த பாண்டிய நாட்டு புலவர் பிசிராந்தையார், சோழ நாட்டு மன்னன் கோப்பெருஞ்சோழன் நட்பு இன்று வரை பேசப்படும் அளவுக்கு உயர்ந்தது. இருவரும் ஒருவரையொருவர் பார்க்காமலேயே நட்பு கொண்டனர்.

பதவிக்கு மகன்களிடையே போட்டி ஏற்பட்டதால், சோழமன்னன் வடக்கிருந்து உயிர் துறக்க முடிவு செய்தான். ஆனால், தன்னை பார்க்க பிசிராந்தையார் வருவார் என்று அறிந்து அவருக்கும் தன் பக்கத்திலேயே வடக்கிருந்து உயிர் துறக்க இடம் அமைத்து தந்தான். குறிப்பறிந்து பிசிராந்தையாரும் அங்கு வந்து சேர்ந்தார். இருவரும் சேர்ந்து வடக்கிருந்து உயிர் நீத்தனர் என்று நட்பின் மேன்மையை வரலாறு கூறுகிறது.

இன்றும் நட்பு என்றால் எல்லோர் முகத்திலும் புன்னகைப் பூ பூக்கும். முகம் பிரகாசமாகும். ஏனென்றால் எதையும் எதிர்பார்க்காமல் என்றென்றும் நிலைப்பதே நட்பு. உதவியை செய்துவிட்டுத்தான் பேச ஆரம்பிக்கிறது நட்பு. காரணம் இல்லாமல் கலைந்து போக இது காதலும் இல்லை. நிறைவேறாமல் போனால் சொல்லாமல் செல்ல உறவும் அல்ல. உயிர் உள்ள வரை தொடரும் உண்மையான நட்பு.

நட்பு என்பது நமக்கு ஒரு உத்வேகம், ஊக்குவிப்பு அளித்து நம் இலக்கை அடைய தோள் கொடுக்கும். நட்பு என்பதில் நல்ல நட்பு, கெட்ட நட்பு என்பது கிடையாது. அது தண்ணீர் போல இருக்கும் இடம் அறிந்து தன்னை உருமாற்றிக்கொள்ளும்.

நட்புக்காக உயிர் கொடுத்தோர் பலர். நட்பு என்பது தானும் வாழ்ந்து பிறரையும் வாழவைப்பதே. வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலார் கொண்டதும் நட்பே. தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்றதும் சமூகத்தின் மீதும் சகமனிதனின் மீதும் கொண்ட நட்பே.

நண்பர்கள் தினம் என்பது நட்பின் ஒரு அடையாளம், குறியீடு. ஆனால் ஆண்டாண்டு காலம் துணைவரும் நட்புக்கு அனைத்து நாளும் நண்பர்கள் தினமே.

உயிர் காப்பான் தோழன் என்பது முதுமொழி. நம்மைப்பற்றி நமக்கே தெரியாத ரகசியங்களை நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டும் சிறந்த கருவிதான் நட்பு. நம் தவறை நியாயப்படுத்தும் நண்பனை விடவும் சுட்டிக்காட்டி திருத்தும் நண்பன் தான் சிறந்தவன். விலைமதிப்பு உள்ள முத்தும் தேடித்தான் எடுக்க வேண்டும். ஆனால் தேடாமல் கிடைப்பது நட்பு.

நவில்தொன்றும் நூல்நயம் போலும் என்ற வள்ளுவரின் வாக்கு போல் நற்பண்பு உடைய நண்பர்கள் துணை கொள்வோம். நம் லட்சியத்துக்கு உற்ற துணையாக கொள்வோம். நல்ல நண்பன் நம்மை பற்றி அறிவான். சிறந்த நண்பன் நம்மோடு வாழ்வான்.

ஆனால் இன்று ஊடகங்களிலும், சினிமாக்களிலும் நட்பு என்றாலே மதுபானம் அருந்தவும், புகை பிடிக்கவும், தவறான காரியங்களுக்கும் துணை இருப்பதுபோலவே சித்தரிக்கப்படுகிறது. நடக்கும் நிகழ்வுகளும் அப்படியே இருக்கின்றன.

நண்பனைப் பற்றிச் சொல், உன்னைப் பற்றிக் கூறுகிறேன் என்பார்கள். நாம் நண்பர்களின் கண்ணாடி. எனவே புனிதமான நட்பை கவனமாக கையாளுவோம். காலம் உள்ளவரை போற்றுவோம். நண்பர்கள் தினம் மட்டுமல்ல. தினம், தினம் நட்பை கொண்டாடுவோம். ஆகஸ்டு முதல் வாரம் மட்டுமல்ல, ஆண்டின் அத்தனை நாட்களும் நண்பர்கள் தினம் தான். நட்பு தினம் தான்.

- பேராசிரியை ஆர்.காயத்ரி

Next Story