பரவசப்படுத்தும் ‘பயிர் ஓவியம்’


பரவசப்படுத்தும் ‘பயிர் ஓவியம்’
x
தினத்தந்தி 5 Aug 2018 2:12 PM IST (Updated: 5 Aug 2018 2:12 PM IST)
t-max-icont-min-icon

விளை நிலத்தில் ஓவியங்கள் தீட்டப்பட்டிருப்பது போல பயிர்களை விளைவித்து அசத்துகிறார், ஸ்ரீகாந்த் இன்கால் ஹலிகர்.

‘டேம்போ அடோ’ எனப்படும் இந்த விவசாய ஓவிய கலையை ஜப்பானிய விவசாயிகள் பின்பற்றி வருகிறார்கள். விவசாய பயிர்களை நான்கு, ஐந்து வகையான நிறங்களில் நடவு செய்வார்கள். அவை வளர்ந்து மகசூலை எட்டும்போது பார்ப்பதற்கு ஓவியம் வரைந்தது போன்று காட்சியளிக்கும். அதுபோன்று தனது விளை நிலங்களில் பயிர்கள் விளைவிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார், ஸ்ரீகாந்த். 64 வயதாகும் இவர் மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்தவர். விவசாயி, இயற்கை ஆர்வலர், எழுத்தாளர், வன விலங்கு புகைப்பட கலைஞர் என பல பரிணாமங்களை கொண்டவர்.

விவசாய குடும்பத்தை சேர்ந்தவரான ஸ்ரீகாந்த் 25 ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக ஜப்பானிய பாணியை பின்பற்றி பயிர்களை ஓவியங் களாக உருமாற்றுகிறார். இவருடைய பயிர் ஓவியங்களை பார்வையிடுவதற்காக நாட்டின் பல பகுதியில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இவர் வசிக் கும் கிராமத்தில் 8 ஆயிரம் பேர் வசிக்கிறார்கள். ஆனால் இவர் விளை நிலத்தை பார்வையிட வருபவர்கள் எண்ணிக்கை ஆண்டுதோறும் லட்சங்களை கடந்து சென்று கொண்டிருக் கிறது.

‘‘எங்கள் பகுதியில் நெல் அதிகமாக விளைகிறது. ஜப்பானில் சில விவசாயிகள் வித விதமான நிறங்களில் பயிர்களை வளர்ப்பதை கேள்விப்பட்டேன். அந்த விளைநிலங்கள் பல வடிவங்களைக் கொண்டிருப்பது பார்ப்பதற்கு அழகாக தெரிந்தது. அதுபோல் நாமும் விளைவிக்கலாமே என்று முயற்சித்தேன். முதலில் அது சாத்தியமில்லை என்றே தோன்றியது. ஏனெனில் நம் நாட்டில் நெற்பயிர்கள் பச்சை நிறத்தில் மட்டுமே காட்சியளிக்கின்றன. ஆனால் ஜப்பானியர்கள் 5 விதமான நிறங்களை நெல் ரகங்களில் உருவாக்கிவிடுகிறார்கள். அதுபோன்ற நெல் விதைகளை இறக்குமதி செய்வது தடைசெய்யப் பட்டுள்ளது. அதனால் நம் நாட்டில் அதுபோன்ற நெல் ரகங்கள் இருக்கிறதா என்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டேன்.



இறுதியில் பழுப்பு நிறத்தில் இலைகளை கொண்ட நெல் ரகங்களை தேர்வு செய்தேன். முதலில் எந்தவிதமான நிறத்தில் பயிர்களை விளைவிப்பது என்பதை முடிவு செய்ததும் விளைநிலத்தை அளவு எடுப்பேன். அதனை கம்ப்யூட்டரில் ஓவியமாக வரைந்து கொள்வேன். பிறகுபழுப்பு நிற பயிர்களை எந்தெந்த இடங்களில் வளர்ப்பது என்பதை அளவீடு செய்து நடவு பணியை மேற்கொள்வேன். பயிர்கள் வளர்ந்ததும் பார்ப்பதற்கு ஓவியமாக தெரிவதால் பலரும் வந்து பார்வையிடுகிறார்கள்’’ என்கிறார்.

ஸ்ரீகாந்தை போலவே அசாமை சேர்ந்த பிரஷித்குமார் என்ப வரும் பயிர்களை ஓவிய நிற அமைப்பில் விளைவிக்கிறார். 

Next Story