பெண் சமையலருக்கு தீண்டாமை கொடுமை பிரச்சினை வழக்கு: தலைமறைவாக இருந்த பெண் கைது
அவினாசி அருகே பெண் சமையலருக்கு தீண்டாமை கொடுமை பிரச்சினை தொடர்பான வழக்கில் தலைமறைவாக இருந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
சேவூர்,
அவினாசி அருகே உள்ள குட்டகம் ஊராட்சி திருமலைக்கவுண்டன்பாளையம் ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர் பாப்பாள் (வயது 42). இவர் ஒச்சாம்பாளையம் பள்ளியில் சத்துணவு சமையலராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் திருமலைக்கவுண்டன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் பணியாற்றி வந்த பெண் சமையலர் ஓய்வு பெற்றதையடுத்து, திருமலைக்கவுண்டன்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு பாப்பாள் இடம் மாற்றம் செய்யப்பட்டார். அதன்படி பாப்பாள், திருமலைக்கவுண்டன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் சமையலராக பணியாற்றினார்.
இந்த நிலையில் தீண்டாமைக்கொடுமையால், ஒரு சிலர் அந்த பள்ளியில் பாப்பாள் சமையல் செய்யக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் ஏராளமானவர்கள் பள்ளிக்கு வந்து பாப்பாளை பணி செய்யவிடாமல் தடுத்து, பள்ளியின் கதவையும் பூட்டினார்கள். இதையடுத்து பாப்பாள் ஏற்கனவே பணியாற்றிய ஒச்சாம்பாளையம் பள்ளிக்கே இடமாறுதல் செய்யப்பட்டார். இந்த பிரச்சினை தொடர்பாக பாப்பாள் சேவூர் போலீசில் புகார் செய்தார். இந்த பிரச்சினை தொடர்பாக பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தினார்கள்.
இதைத்தொடர்ந்து பாப்பாளின் இடமாற்றம் ரத்து செய்யப்பட்டு, திருமலைக்கவுண்டன்பாளையம் பள்ளியில் சமையலராக மீண்டும் நியமிக்கப்பட்டார். இதையடுத்து அவர் அந்த பள்ளியில் பணியாற்றினார்.
இதற்கிடையில் புகாரின் பேரில் சேவூர் போலீசார், வன்கொடுமை தடுப்பு சட்டம், கொலைமிரட்டல், தகாத வார்த்தையால் திட்டுதல், பொதுஇடத்தில் தகராறு செய்தல், பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் 87 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அதைத்தொடர்ந்து திருமலைக்கவுண்டன் பாளையத்தை சேர்ந்த கந்தசாமி (47), முர்த்தி (27), கே.பழனிச்சாமி (39), மூர்த்தி (47), சண்முகம் (42), சக்திவேல் (40), பழனிச்சாமி (60), குட்டகம், ஏளுரை சேர்ந்த அம்மாசை(58) ஆகிய 8 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
அதைத்தொடர்ந்து இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த திருமலைக்கவுண்டன்பாளையத்தை சேர்ந்த பழனிச்சாமியின் மனைவி ராஜாமணி (48) என்பவரை போலீசார் கைது செய்தனர். இதனால் இந்த வழக்கில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.