சேலம் அருகே 8 வழிச்சாலைக்கு எதிராக உண்ணாவிரதம் பெண்கள் உள்பட 15 பேர் கைது


சேலம் அருகே 8 வழிச்சாலைக்கு எதிராக உண்ணாவிரதம் பெண்கள் உள்பட 15 பேர் கைது
x
தினத்தந்தி 6 Aug 2018 4:30 AM IST (Updated: 6 Aug 2018 12:11 AM IST)
t-max-icont-min-icon

சேலம்-சென்னை இடையே 8 வழி பசுமைச்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சேலம் அருகே, உண்ணாவிரதம் இருந்த 6 பெண்கள் உள்பட 15 பேரை போலீசார் கைது செய்தனர்.

அயோத்தியாப்பட்டணம்,

சேலம்-சென்னை இடையே 8 வழி பசுமைச்சாலை அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தும் பணி சேலம் மாவட்டத்தில் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக நிலம் அளவீடு செய்து எல்லைக்கல் நடப்பட்டது.

தற்போது எல்லைக்கல் நடப்பட்ட நிலங்கள் மற்றும் அதில் உள்ள வீடு, கிணறு, ஆழ்துளை கிணறு, மரங்கள் ஆகியவற்றை கணக்கீடு செய்து மதிப்பீடு பணி நடைபெற்று வருகிறது. முன்னதாக இந்த அளவீடு பணிகள் நடைபெறும் போது, விவசாயிகள் உள்பட பல்வேறு தரப்பினர் நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினார்கள்.

இருப்பினும் போலீஸ் பாதுகாப்புடன் நிலம் அளவீடு மற்றும் கணக்கீடு பணிகள் நடைபெற்றது. மேலும் இந்த சாலையில் பாலங்கள் அமைய உள்ள இடங்களில் மண் பரிசோதனைக்கு எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு 8 வழிச்சாலை பணியில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். அதே நேரத்தில், இந்த சாலையால் மின்னாம்பள்ளி ஊராட்சி குள்ளம்பட்டி பிரிவு பகுதியில் உள்ள பெரியாண்டிச்சியம்மன் கோவிலும் பாதிக்கப்படும் என்று கணக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில் மின்னாம்பள்ளி, குள்ளம்பட்டி பகுதியில் 8 வழிச்சாலையால் பாதிக்கப்படும் விவசாயிகள் மற்றும் சிலர் நேற்று காலை 10½ மணியளவில் பெரியாண்டிச்சி அம்மன் கோவிலுக்கு வந்தனர். அங்கு அவர்கள் இந்த திட்டப்பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து திடீரென உண்ணாவிரதம் இருந்தனர்.

இது குறித்து தகவல் கிடைத்ததும், காரிப்பட்டி இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் தலைமையிலான போலீசார், உண்ணாவிரதம் நடைபெற்ற இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு அனுமதியின்றி உண்ணாவிரதம் இருந்ததாக கூறி, 6 பெண்கள் உள்பட 15 பேரை போலீசார் கைது செய்தனர். மாலையில் அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

உண்ணாவிரத போராட்டம் தொடங்கிய ஒரு மணி நேரத்தில் அவர்களை போலீசார் கைது செய்த சம்பவம் அப்பகுதியில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story