துமகூருவில் சிக்னல் கிடைக்காததால் 1½ மணிநேரம் ரெயில் தாமதம் தண்டவாளத்தில் அமர்ந்து பயணிகள் போராட்டம்


துமகூருவில் சிக்னல் கிடைக்காததால் 1½ மணிநேரம் ரெயில் தாமதம் தண்டவாளத்தில் அமர்ந்து பயணிகள் போராட்டம்
x
தினத்தந்தி 5 Aug 2018 9:30 PM GMT (Updated: 5 Aug 2018 6:43 PM GMT)

துமகூருவில் சிக்னல் கிடைக்காததால் 1½ மணிநேரம் தாமதமாக பெங்களூரு–அரிசிகெரே ரெயில் புறப்பட்டு சென்றது.

பெங்களூரு,

துமகூருவில் சிக்னல் கிடைக்காததால் 1½ மணிநேரம் தாமதமாக பெங்களூரு–அரிசிகெரே ரெயில் புறப்பட்டு சென்றது. இதனால் தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பயணிகள், அந்த ரெயில் மீது கற்களை வீசி தாக்கினர். இதன்காரணமாக பரபரப்பு ஏற்பட்டது.

பயணிகள் போராட்டம்

பெங்களூரு–அரிசிகெரே இடையே பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. அந்த ரெயில் நேற்று முன்தினம் இரவு பெங்களூருவில் இருந்து அரிசிகெரேக்கு புறப்பட்டது. துமகூரு மாவட்டம் மல்லசந்திரா அருகே இரவு 8.30 மணியளவில் திடீரென்று அந்த ரெயில் நிறுத்தப்பட்டது. அதாவது உப்பள்ளியில் இருந்து துமகூரு வழியாக எக்ஸ்பிரஸ் ரெயில் பெங்களூருவுக்கு செல்ல இருந்ததால், மல்லசந்திராவில் பெங்களூரு–அரிசிகெரே ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது பயணிகளுக்கு தெரியவந்தது.

ஆனால் இரவு 9.30 மணி ஆகியும் மல்லசந்திராவில் இருந்து அந்த ரெயில் புறப்படவில்லை. இதனால் பயணிகள் ஆத்திரமடைந்தனர். பின்னர் மல்லசந்திராவில் உள்ள தண்டவாளத்தில் அமர்ந்து திடீரென்று பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அங்கிருந்து புறப்பட்டு செல்லும்படி ரெயிலில் இருந்த அதிகாரிகளிடம் பயணிகள் கூறினர். ஆனால் சிக்னல் கிடைக்காததால் ரெயில் புறப்பட்டு செல்ல முடியாது என்று பயணிகளிடம் அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.

ரெயில் மீது கற்கள் வீச்சு

இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட பயணிகள் திடீரென்று தண்டவாளத்தில் கிடந்த கற்களை எடுத்து ரெயில் மீது சரமாரியாக வீசினார்கள். இதில், ரெயில் என்ஜின் பகுதியில் லேசான சேதம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தினால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி அறிந்ததும் ரெயில்வே போலீசார் மற்றும் துமகூரு புறநகர் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் பயணிகளை சமாதானப்படுத்தினர்.

அதே நேரத்தில் இரவு 10 மணியளவில் உப்பள்ளி–பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில் மல்லசந்திராவை கடந்து சென்றது. பின்னர் சிக்னல் கிடைத்ததும் மல்லசந்திராவில் இருந்து அரிசிகெரேவுக்கு பயணிகள் ரெயில் புறப்பட்டு சென்றது. 1½ மணிநேரம் தாமதமாக ரெயில் புறப்பட்டு சென்றதால் பயணிகள் அதிருப்தியும், ஆத்திரமும் அடைந்தனர்.


Next Story