ஜி.எஸ்.டி.யில் 18, 28 சதவீத வரி விதிப்பை முழுமையாக அகற்ற வேண்டும் விக்கிரமராஜா பேட்டி


ஜி.எஸ்.டி.யில் 18, 28 சதவீத வரி விதிப்பை முழுமையாக அகற்ற வேண்டும் விக்கிரமராஜா பேட்டி
x
தினத்தந்தி 6 Aug 2018 4:30 AM IST (Updated: 6 Aug 2018 12:26 AM IST)
t-max-icont-min-icon

ஜி.எஸ்.டி.யில் 18 மற்றும் 28 சதவீத வரிவிதிப்பை முழுமையாக அகற்ற வேண்டும் என்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கூறினார்.

நாமக்கல்,

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா நேற்று நாமக்கல்லில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஜி.எஸ்.டி. வரிவிதிப்பால் வணிகர்கள் பாதிப்பு அடைந்து உள்ளனர். எனவே 18 மற்றும் 28 சதவீத வரிவிதிப்பை முழுமையாக அகற்ற வேண்டும். அதற்கு பதில் 5 மற்றும் 12 சதவீத வரிவிதிப்பு மட்டும் இருக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, டெல்லியில் அடுத்த மாதம் அனைத்திந்திய வணிகர்கள் சம்மேளனம் சார்பில் பேரணி நடத்தி, மத்திய அரசு அதிகாரிகளிடம் மனு அளிக்க உள்ளோம்.

அதன் பிறகும் நீக்காவிட்டால், மாநிலம் தழுவிய அளவில் தொடர் போராட்டத்தில் வணிகர்கள் சங்கம் ஈடுபடும். இந்தியாவில் சில்லறை வணிகத்தில் நுழைய அன்னிய நாட்டு நிறுவனமான ‘வால்மார்ட்’ முயற்சித்து வருகிறது. இதை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம். சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்க மாட்டோம் என கூறியவர்கள் நாட்டை தற்போது ஆண்டு கொண்டிருக்கிறார்கள்.

தமிழகத்தில் பிளாஸ்டிக் பைகளை தடை செய்வதில் முரண்பாடு நிலவுகிறது. முதல்-அமைச்சர் ஒரு அறிவிப்பும், மாவட்ட கலெக்டர்கள் ஒரு அறிவிப்பும் வெளியிடுகிறார்கள். வெளிநாட்டு நிறுவனம் தயாரிக்கும் பிஸ்கட் பாக்கெட் பிளாஸ்டிக் கவர்களுக்கும் தடை விதிக்க வேண்டும். சட்டம் என்பது அனைவருக்கும் பொதுவாக இருக்கவேண்டும்.

எனவே தமிழக அரசு வணிகர்களை அழைத்து பேசி, எந்தெந்த பொருட்களுக்கு பிளாஸ்டிக் பைகளை தடை செய்ய வேண்டும் என முடிவு செய்யவேண்டும். அதற்கு முன்பு வணிகர்களை அச்சுறுத்தும் வகையில் கடைகளில் அதிகாரிகள் சோதனைக்கு வந்தால், அவர்களுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட தலைவர் பெரியசாமி மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Next Story