வனப்பகுதியில் வசிக்கும் இருளர் இன மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் அமைச்சர் வழங்கினார்


வனப்பகுதியில் வசிக்கும் இருளர் இன மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் அமைச்சர் வழங்கினார்
x
தினத்தந்தி 6 Aug 2018 4:15 AM IST (Updated: 6 Aug 2018 12:33 AM IST)
t-max-icont-min-icon

பென்னாகரம் அருகே வனப்பகுதியில் வசிக்கும் இருளர் இன மக்களுக்கு 8 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று அமைச்சர் கே.பி.அன்பழகன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே வனப்பகுதியில் உள்ள சருக்கள் பாறை என்ற இடத்தில் 29 குடும்பங்களை சேர்ந்த 102 இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு வீட்டுமனை பட்டா, பசுமை வீடு, குடும்ப அட்டை, சாதி சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தனர். இது பற்றி தகவல் அறிந்த கலெக்டர் மலர்விழி ஆய்வு செய்து இருளர் இன மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க நடவடிக்கை மேற்கொண்டார்.

இதனிடையே போக்குவரத்து வசதி இல்லாத சருக்கள் பாறைக்கு வனப்பகுதி வழியாக 8 கிலோ மீட்டர் தூரம் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் நடந்து சென்றார். அவருடன் கலெக்டர் மலர்விழி மற்றும் அரசு அதிகாரிகள், அ.தி.மு.க. நிர்வாகிகளும் நடந்து சென்றனர். அங்கு சென்ற அமைச்சர், கலெக்டருக்கு இருளர் இன மக்கள் வரவேற்பு அளித்தனர்.

இதை தொடர்ந்து நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கினார். உதவி கலெக்டர் சிவன்அருள், மாவட்ட வருவாய் அலுவலர் சங்கர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் காளிதாசன், தாசில்தார் அழகுசுந்தரம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விமலன், கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் அமைச்சர் கே.பி.அன்பழகன் இருளர் இன மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அதன்படி 29 பேருக்கு வீட்டுமனை பட்டா, 29 பேருக்கு பசுமை வீடுகள் வழங்குவதற்கான ஆணை, 6 பேருக்கு குடும்ப அட்டை, 51 மாணவ, மாணவிகளுக்கு சாதி சான்றிதழ் என மொத்தம் ரூ.64 லட்சத்து 69 ஆயிரம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதே போன்று இருளர் இன மக்களுக்கு ரூ.1½ லட்சம் மதிப்பில் சமையல் பாத்திரங்கள், உணவு பொருட்கள், போர்வை, தலையணை, பாய் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களை அமைச்சர் தனது சொந்த செலவில் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் டி.ஆர்.அன்பழகன், முன்னாள் நகராட்சி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் மதியழகன், முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் வேலுமணி, முன்னாள் பேரூராட்சி தலைவர் சுப்பிரமணியன், முன்னாள் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் கே.வி.ரங்கநாதன், கூட்டுறவு சங்க தலைவர் சிவப்பிரகாசம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரவி, எம்.ஜி.ஆர்.மன்ற நிர்வாகி ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து, உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழக அரசையும், உயர்கல்வித்துறையையும் குறை கூற ராமதாசுக்கு எந்த தகுதியும் இல்லை. இந்தியாவிற்கே வழிகாட்டும் வகையில் தமிழக உயர்கல்வித்துறை உயர்ந்து நிற்கிறது. கடந்த 2017-18-ம் ஆண்டில் அனைவரும் உயர்கல்வி பெறும் நோக்கில் பல்வேறு புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்திய அளவில் 25.8 சதவீத மாணவர்கள் உயர்கல்வியில் சேர்ந்திருந்தாலும், தமிழகத்தில் 48.6 சதவீத மாணவர்கள் உயர்கல்வி படித்து வருகின்றனர்.

அன்புமணி ராமதாஸ் மத்திய அமைச்சரவையில் இருந்தபோது அவருடைய செயலாளர் அறையிலேயே 1,500 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டது. ரூ.1,800 கோடியும் கைப்பற்றப்பட்டது. அப்போது மத்திய அமைச்சராக இருந்த அன்புமணி பதவி விலகியிருக்க வேண்டும். இந்த நிலையில் ராமதாஸ் தமிழக அரசை குறை கூறிவருகிறார். தமிழகத்தில் எந்த துறையில் தவறுகள் நடந்திருந்தாலும் முழுமையாக ஆய்வு செய்து தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

அண்ணா பல்கலைக்கழக முறைகேடு தொடர்பாக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் உமா தற்காலிகமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு உடந்தையாக இருந்த விஜயகுமார், சிவக்குமார் ஆகியோரும் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இதில் நடைபெற்றுள்ள தவறுகளை முழுமையாக ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. தமிழக அமைச்சர்கள் பதவி விலகவேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்துவது கண்டிக்கத்தக்கது.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story