கடலூர் மத்திய சிறையில் 43 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை
கடலூர் மத்திய சிறையில் இருந்து 43 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களை உறவினர்கள் மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு அழைத்துச்சென்றனர்
கடலூர் முதுநகர்,
முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா தமிழக அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவையொட்டி தமிழக சிறைகளில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளின் நன்னடத்தை அடிப்படையில், அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
அதன் அடிப்படையில் கடலூர் மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வரும் ஆயுள் தண்டனை கைதிகளில், 10 ஆண்டு தண்டனை முடித்த நன்னடத்தை கைதிகள் 43 பேர் விடுதலை செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.
இது பற்றி முன்கூட்டியே விடுதலை செய்யப்படும் கைதிகளின் உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்படி அவர்கள் கடலூர் மத்திய சிறைச்சாலைக்கு அதிகாலையிலேயே வரத்தொடங்கினர். காலை 9 மணிக்கு மேல் ஆயுள் தண்டனை கைதிகள் 43 பேர் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களை உறவினர்கள் மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு அழைத்துச்சென்றனர்.
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி இதுவரை 99 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர். மேலும் அடுத்த 2 வாரத்தில் 57 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட உள்ளதாக சிறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story