ரஜினிகாந்த் அ.தி.மு.க.வின் தலைவராக முடியாது அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி


ரஜினிகாந்த் அ.தி.மு.க.வின் தலைவராக முடியாது அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி
x
தினத்தந்தி 5 Aug 2018 11:00 PM GMT (Updated: 5 Aug 2018 8:09 PM GMT)

ரஜினிகாந்த் அ.தி.மு.க.வின் தலைவராக முடியாது. எங்களது கொள்கைகளை ஏற்று கொண்டால் தொண்டனாக சேரலாம் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

மதுரை,

அ.தி.மு.க. இளைஞர் பாசறை சார்பில் மதுரை முனிச்சாலையில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நேற்று நடந்தது. அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

இளைஞர்களின் உழைப்புக்கு அங்கீகாரம் கொடுக்கும் ஒரே இயக்கம் அ.தி.மு.க. தான். இன்றைக்கு உறுப்பினர்களாக சேரும் இளைஞர்களுக்கு தகுதியும், திறமையும் இருந்தால் வருகிற உள்ளாட்சி தேர்தலில் உரிய அங்கீகாரம் வழங்கப்படும். அதற்காக கட்சி தலைமையிடத்துக்கு மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பாக பரிந்துரை செய்யப்படும்.

ரே‌ஷன் கடை ஊழியர்கள் சங்கத்தினர் நாளை (இன்று) முதல் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்து உள்ளனர். அவர்களுடன் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அனைத்து சங்கங்களும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. எனவே ரே‌ஷன் பொருட்கள் வினியோகத்தில் எந்த பாதிப்பும் இருக்காது. வேலை நிறுத்தம் செய்யும் ஊழியர்கள், ரே‌ஷன் கடைகளில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தினால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

திருப்பரங்குன்றம் தொகுதி என்றைக்கும் அ.தி.மு.க.வின் கோட்டை ஆகும். அங்கு எப்போது தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க. வெற்றி பெறும்.

அ.தி.மு.க.வின் கொள்கைகளை ஏற்று யார் வந்தாலும் கட்சியில் சேர்த்துக் கொள்வோம். அதே நேரத்தில் தலைவராக இருப்பவர்கள் அ.தி.மு.க.விற்கு வர விரும்புகிறார்கள் என்றால், அவர்களை கட்சியில் சேர்ப்பதற்கு முதல்–அமைச்சரும், துணை முதல்–அமைச்சரும் இணைந்து முடிவெடுப்பார்கள். அ.தி.மு.க.வில் தொண்டராக இருக்கும் யார் வேண்டுமானாலும் தலைவர் பதவிக்கு வரலாம். ஆனால் வெளியில் இருந்து அ.தி.மு.க.விற்கு வரும் யாராக இருந்தாலும், அது ரஜினிகாந்த், கமல்ஹாசனாக இருந்தாலும் அவர்கள் தலைவராக முடியாது. எங்களது கொள்கைகளை ஏற்று தொண்டராக சேரலாம்.

அதன்பின் அவர்கள் கட்சிக்கு ஆற்றுகின்ற பணியின் மூலமாகவும், விசுவாசத்தின் மூலமாகவும் படிப்படியாக முன்னேறலாம். அ.தி.மு.க.வில் புதிதாக சேர்ந்து எனக்கு கீழ் எல்லோரும் பணியாற்ற வேண்டும் என்று நினைத்தால் அதற்கு இங்கு இடமில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story