பூந்தமல்லியில் தனியார் தொழிற்சாலையில் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்


பூந்தமல்லியில் தனியார் தொழிற்சாலையில் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 5 Aug 2018 10:45 PM GMT (Updated: 5 Aug 2018 8:47 PM GMT)

பூந்தமல்லியில் தனியார் தொழிற்சாலையில் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பூந்தமல்லி,

பூந்தமல்லியில் தனியாருக்கு சொந்தமான தொழிற்சாலை ஒன்று உள்ளது. இங்கு பெரிய அளவில் பாய்லர்கள் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இதில் ஒப்பந்தம் மற்றும் நிரந்தர ஊழியர்களாக ஏராளமானோர் வேலை செய்து வருகின்றனர்.

ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும். திறந்தவெளியில் எக்ஸ்ரே எடுப்பதை நிறுத்தவேண்டும். ஊதிய உயர்வு அளிக்கவேண்டும். தங்களது சங்கத்தை அங்கீகரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 140–க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், கடந்த 4 நாட்களாக தொழிற்சாலையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களை காண அவர்களது குடும்பத்தை சேர்ந்த 100–க்கும் மேற்பட்டோர் தங்கள் குழந்தைகளுடன் நேற்று தொழிற்சாலை முன்பு ஒன்று திரண்டனர். அவர்கள் தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கோ‌ஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த பூந்தமல்லி போலீசார், அனைவரையும் சமரசம் செய்து கலைந்துபோக செய்தனர்.

தொழிற்சாலையின் உள்ளே தொழிலாளர்கள் தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அசம்பாவிதங்களை தடுக்க தொழிற்சாலை முன்பு பூந்தமல்லி போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story