ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் உறவினரின் உடல் நலம் விசாரிக்க வந்த பெண் விபத்தில் பலி


ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் உறவினரின் உடல் நலம் விசாரிக்க வந்த பெண் விபத்தில் பலி
x
தினத்தந்தி 5 Aug 2018 10:00 PM GMT (Updated: 5 Aug 2018 9:37 PM GMT)

சேலத்தில் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் உறவினரின் உடல் நலம் விசாரிக்க வந்த பெண் விபத்தில் பலியானார்.

கொண்டலாம்பட்டி,

சேலம் மாவட்டம், மேச்சேரி அருகே உள்ள புக்கம்பட்டியை சேர்ந்தவர் பூபதி (வயது 50), மீன் வியாபாரி. இவருடைய மனைவி செல்வி(45). செல்வியின் நாத்தனார் மகள் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சேலம் சீலநாயக்கன்பட்டியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

நேற்று காலை அவரின் உடல் நலம் விசாரிக்க மேச்சேரியில் இருந்து சேலம் பழைய பஸ் நிலையத்திற்கு செல்வி பஸ்சில் வந்தார். அங்கிருந்து ஆஸ்பத்திரிக்கு செல்ல வழி தெரியாததால், ஆஸ்பத்திரியில் இருக்கும் நாத்தனார் மகளை உடன் இருந்து கவனிக்கும், நாத்தனாரின் மகன் பாலகிருஷ்ணனுக்கு(25) செல்போனில் செல்வி தொடர்பு கொண்டார்.

உடனே பாலகிருஷ்ணன் தனது ஸ்கூட்டரில் பழைய பஸ் நிலையத்திற்கு வந்து செல்வியை அங்கிருந்து ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். கொண்டலாம்பட்டி ரவுண்டானாவை அடுத்து சீலநாயக்கன்பட்டி சாலையில் ஸ்கூட்டர் வந்தது.

அப்போது கேரள மாநிலத்தில் இருந்து சரக்கு வேன் ஒன்று வாழப்பாடி நோக்கி வந்தது. அந்த சரக்கு வேன் எதிர்பாராதவிதமாக ஸ்கூட்டர் மீது பின்பக்கமாக மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த செல்வி சம்பவ இடத்திலேயே இறந்தார். பாலகிருஷ்ணன் லேசான காயம் அடைந்தார்.

இது தகவல் கிடைத்ததும், கொண்டலாம்பட்டி இன்ஸ்பெக்டர் ரவிக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் உஷாராணி ஆகியோர் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து வந்து செல்வியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் பலியான செல்விக்கு 2 மகன்கள் உள்ளனர்.

உறவினரின் உடல் நலம் விசாரிக்க சென்ற பெண் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் மேச்சேரி அருகே புக்கம்பட்டி கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியது. 

Next Story