தனியார் பள்ளியில் பணம் கையாடல் செய்த தலைமை ஆசிரியை கைது
மடிப்பாக்கத்தில், தனியார் மழலையர் பள்ளியில் ரூ.2 லட்சத்து 64 ஆயிரம் கையாடல் செய்ததாக தலைமை ஆசிரியை கைது செய்யப்பட்டார்.
ஆலந்தூர்,
சென்னையை அடுத்த மடிப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் திருஞானசம்பந்தம். இவர், மடிப் பாக்கம் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் செய்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
நான், மடிப்பாக்கம் ராமலிங்க நகர் மெயின் ரோட்டில் அரசு அனுமதியுடன் தனியார் மழலையர் பள்ளி நடத்தி வருகிறேன். இந்த பள்ளிக்கு தலைமை ஆசிரியையாக மடிப்பாக்கத்தைச் சேர்ந்த கிறிஸ்டினா(வயது 45) என்பவர் இருந்து வருகிறார்.
இந்த ஆண்டு எனது பள்ளியில் குழந்தைகளை சேர்க்க வந்த பெற்றோர்களை, எனது பள்ளியில் சேர்க்கவிடாமல் கமிஷன் அடிப்படையில் அதே பகுதியில் தனியார் வங்கி ஊழியரான அனிதா என்பவர் நடத்தும் மற்றொரு தனியார் மழலையர் பள்ளிக்கு அனுப்பி உள்ளார்.
மேலும் பள்ளி மாணவர்களை சேர்க்க வாங்கிய ரூ.74 ஆயிரத்தை பள்ளி வங்கி கணக்கில் சேர்க்காமல் கையாடல் செய்து விட்டார். பள்ளியில் இருந்த ரூ.1 லட்சத்து 90 ஆயிரத்தையும் திருடி விட்டார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி இருந்தார்.
இது தொடர்பாக பரங்கிமலை போலீஸ் துணை கமிஷனர் முத்துசாமி உத்தரவின்பேரில் மடிப்பாக்கம் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சேகர் சிங் வழக்குப்பதிவு செய்து விசாரித்தார்.
அந்த தனியார் மழலையர் பள்ளியில் பணம் கையாடல் செய்ததாக அப்பள்ளி தலைமை ஆசிரியை கிறிஸ்டினாவை போலீசார் கைது செய்தனர். அவரை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தனியார் வங்கி ஊழியர் அனிதாவிடம் போலீசார் விசாரணை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.
Related Tags :
Next Story