அகஸ்தியர் அருவியில் குளித்த 2 பெண்களிடம் நகை பறிப்பு
பாபநாசம் அகஸ்தியர் அருவியில் குளித்த 2 பெண்களிடம் நகை பறித்தவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விக்கிரமசிங்கபுரம்,
நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் அகஸ்தியர் அருவி உள்ளது. இங்கு உள்ளூர் மட்டும் இல்லாமல் வெளியூரில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்துடன் வந்து குளித்து மகிழ்ந்து செல்கின்றனர். இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் அகஸ்தியர் அருவியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.
பெரம்பலூர் மாவட்டம் செட்டிகுளத்தை சேர்ந்தவர் சீனிவாசன் மனைவி விஜயலட்சுமி (வயது 60). இவர் தனது குடும்பத்துடன் அகஸ்தியர் அருவிக்கு சுற்றுலா வந்தார். அதேபோல் கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியம் மனைவி செல்லத்தங்கம் (67) என்பவரும் தனது குடும்பத்துடன் அகஸ்தியர் அருவிக்கு வந்தனர்.
அருவியில் விஜயலட்சுமி, செல்லத்தங்கம் குளித்து கொண்டிருந்தனர். அப்போது சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. பின்னர் அவர்கள் குளித்துவிட்டு வெளியே வந்தனர். அப்போது தங்களது கழுத்தில் கிடந்த தங்க நகைகளை காணாமல் அதிர்ச்சி அடைந்தனர். கூட்ட நெரிசலை பயன்படுத்தி விஜயலட்சுமி கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்க சங்கிலியையும், செல்லத்தங்கம் கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க சங்கிலியையும் யாரோ பறித்து சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து 2 பேரும் விக்கிரமசிங்கபுரம் போலீசில் தனித்தனியாக புகார் அளித்தனர். அந்த புகார்களின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி, 2 பெண்களிடம் நகை பறித்தவர்களை வலைவீசி தேடிவருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story