ஆறுமுகநேரியில் வீட்டின் கதவை உடைத்து நகை-பணம் திருட்டு


ஆறுமுகநேரியில் வீட்டின் கதவை உடைத்து நகை-பணம் திருட்டு
x
தினத்தந்தி 6 Aug 2018 4:00 AM IST (Updated: 6 Aug 2018 5:57 AM IST)
t-max-icont-min-icon

ஆறுமுகநேரியில் வீட்டின் கதவை உடைத்து நகை-பணத்தை திருடிச் சென்றவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஆறுமுகநேரி, 



ஆறுமுகநேரி காமராஜபுரம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் வன்னியராஜ் மகன் ராஜ்குமார் (வயது 46). இவர் சென்னையில் டிராவல்ஸ் ஏஜென்சி நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமான சில ஆண்டுகளில் விவாகரத்து ஆனது. பின்னர் ராஜ்குமார் தன்னுடைய பெற்றோருடன் சென்னையில் வசித்து வருகிறார்.

ராஜ்குமார் சில மாதங்களுக்கு ஒருமுறை ஆறுமுகநேரியில் உள்ள தனது வீட்டுக்கு வந்து செல்வது வழக்கம். இவரது வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவில் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து திறந்து உள்ளே நுழைந்தனர். பின்னர் வீட்டில் இருந்த பீரோவை உடைத்து திறந்து, அதில் இருந்த 5 பவுன் தங்க நகைகள், ரூ.30 ஆயிரத்தை திருடிச் சென்றனர்.

நேற்று காலையில் ராஜ்குமார் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள், இதுகுறித்து ராஜ்குமாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் இதுகுறித்து ஆறுமுகநேரி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, வீட்டின் கதவை உடைத்து, நகைகள்- பணத்தை திருடிச் சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். கடந்த 1-ந்தேதி இரவில் ஆறுமுகநேரி வடக்கு பஜார் எல்.எப். ரோட்டில் பூராஜ் என்பவரது வீட்டின் கதவை உடைத்து, 6 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

எனவே வீடுபுகுந்து திருடும் கும்பலை போலீசார் உடனே கைது செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 

Next Story