“கோவில்களில் பெண்களும் அர்ச்சகர்களாக வேண்டும்” கி.வீரமணி பேட்டி


“கோவில்களில் பெண்களும் அர்ச்சகர்களாக வேண்டும்” கி.வீரமணி பேட்டி
x
தினத்தந்தி 5 Aug 2018 11:08 PM GMT (Updated: 5 Aug 2018 11:08 PM GMT)

“கோவில்களில் பெண்களும் அர்ச்சகர்களாக வேண்டும்” என கி.வீரமணி தெரிவித்தார்.

தென்காசி, 


திராவிடர் கழகம் சார்பில் ஆண்டுதோறும் குற்றாலத்தில் பெரியாரியல் பயிற்சி பட்டறை நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த ஆண்டும் குற்றாலத்தில் கடந்த 2-ந் தேதி முதல் நேற்று வரை இந்த பயிற்சி பட்டறை நடைபெற்றது. இறுதிநாளான நேற்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கலந்துகொண்டார். 110 மாணவர்கள் பயிற்சி பெற்றனர். முன்னதாக, கி.வீரமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-


சாதி மற்றும் தீண்டாமை ஒழிப்புக்காக பெரியார் தனது வாழ்நாளின் இறுதி வரை போராடினார். கோவில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்று போராடி வந்தார். இந்த போராட்டத்தின் காரணமாக சட்டமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தை இயற்றுவதற்கு கலைஞர் கருணாநிதி தான் முழு காரணம். அவர் உடல்நலம் தேறி வருகிறார்.

தற்போது இந்த சட்டத்துக்கு வெற்றி கிடைத்துள்ளது. இது கலைஞருக்கு கிடைத்த வெற்றி. மதுரையில் ஒரு கோவிலில் பிற்படுத்தப்பட்ட ஒருவர் அர்ச்சகராகி உள்ளார். இதனை பாராட்டுகிறேன். மு.க.ஸ்டாலினும் இதற்கு வரவேற்பு அளித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள 38 ஆயிரம் கோவில்களில் 2 ஆயிரம் பேர் மட்டுமே ஆகம விதிகளின்படி உள்ள அர்ச்சகர்களாக உள்ளனர். மற்ற அர்ச்சகர்கள் ஆகம விதிகள் அறியாதவர்கள். தற்போது அரசு நடத்தும் இதற்கான பயிற்சி பள்ளிகளில் படித்து வேலை கிடைக்காமல் கஷ்டப்படுபவர்களுக்கு பணி கொடுக்க வேண்டும். இதில் எந்த கட்டுப்பாடும் தேவையில்லை.

சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்திலேயே கூறப்பட்டுள்ளது. எனவே இந்த பயிற்சி பள்ளிகளில் பெண்களையும் சேர்க்க வேண்டும். கோவில்களில் பெண்களும் அர்ச்சகர்களாக வேண்டும். நீட் தேர்வு தொடர்பாக சட்டம் இயற்றப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் ஜனாதிபதிக்கு அது அனுப்பப்படவில்லை. எதை கூறினாலும் தலையாட்டும் அளவுக்கு மாநில அரசு இருக்கக்கூடாது.

கல்வித்துறையில் காவி மயமாக்குவதை மத்திய அரசு குறிக்கோளாக கொண்டுள்ளது. மாநில அரசின் உரிமைகளை காப்பாற்ற வேண்டும். தமிழக அரசின் செயல்பாடுகளில் சில நடவடிக்கைகள் ஏற்றுக் கொள்ளும்படி உள்ளன. சில நடவடிக்கைகள் ஏற்றுக் கொள்ள முடியாத அளவில் உள்ளன. அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் துணைவேந்தர் தன்னை காப்பாற்றிக் கொள்ள பிறர் மீது குற்றம் சுமத்தக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது, திராவிடர் கழக மாநில துணை தலைவர் கலிபூங்குன்றன், பொதுச்செயலாளர் ஜெயக்குமார், தென் மாவட்ட பிரசார குழு செயலாளர் டேவிட் செல்லத்துரை, தென்காசி மாவட்ட தலைவர் வீரன், மாநில இளைஞர் அணி செயலாளர் இளந்திரையன், அமைப்பு செயலாளர் செல்வம் ஆகியோர் உடனிருந்தனர். 

Next Story