குற்றாலத்தில் படகு சவாரி திடீர் நிறுத்தம் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்


குற்றாலத்தில் படகு சவாரி திடீர் நிறுத்தம் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
x
தினத்தந்தி 5 Aug 2018 11:14 PM GMT (Updated: 5 Aug 2018 11:14 PM GMT)

குற்றாலத்தில் நேற்று படகு சவாரி திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

தென்காசி, 



குற்றாலத்தில் இருந்து ஐந்தருவிக்கு செல்லும் சாலையில் உள்ள வெண்ணமடை குளத்தில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் படகு குழாம் அமைக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் சீசன் காலத்தில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க படகு சவாரி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் படகு சவாரி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

நேற்று காலை பணியாளர்கள் வழக்கம் போல் படகு குழாமுக்கு வந்தனர். அப்போது அதில் இருந்த ஒரு பணியாளருக்கும், படகு குழாம் அலுவலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து படகு குழாம் அலுவலர் மகேஷ், படகு குழாமை மூடுவதற்கு உத்தரவிட்டார். அதன்படி படகு குழாம் அடைக்கப்பட்டு, படகு சவாரி திடீரென நிறுத்தப்பட்டது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்வதற்கு வந்திருந்தனர். ஆனால் படகு சவாரி திடீரென நிறுத்தப்பட்டதால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். பலர் தங்களது செல்போன்களில் புகைப்படம் எடுத்து நண்பர்களுக்கு பகிர்ந்து கொண்டனர்.

இந்த நிலையில் படகு குழாம் முன்னாள் அலுவலர் அசோகன் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதனை தொடர்ந்து மீண்டும் 12.30 மணியில் இருந்து படகு குழாம் திறக்கப்பட்டது. சுமார் 3 மணி நேரம் வரை படகு சவாரி நிறுத்தப்பட்டதால் சுற்றுலா பயணிகள் அதிருப்தி அடைந்தனர்.


Next Story