விபத்தில் சிக்கியவரை ஆம்புலன்சில் ஏற்றியபோது கார் மோதி 3 பேர் பலி


விபத்தில் சிக்கியவரை ஆம்புலன்சில் ஏற்றியபோது கார் மோதி 3 பேர் பலி
x
தினத்தந்தி 6 Aug 2018 3:30 AM IST (Updated: 6 Aug 2018 5:49 AM IST)
t-max-icont-min-icon

மாமல்லபுரம் அருகே விபத்தில் சிக்கியவரை ஆஸ்பத்திரியில் சேர்ப்பதற்காக அவரை ஆம்புலன்சில் ஏற்றுவதற்கு உதவி செய்தபோது, ஆம்புலன்ஸ் மீது கார் மோதியது. இதில் பெண் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மாமல்லபுரம், 

மாமல்லபுரம் அருகே விபத்தில் சிக்கியவரை ஆஸ்பத்திரியில் சேர்ப்பதற்காக அவரை ஆம்புலன்சில் ஏற்றுவதற்கு உதவி செய்தபோது, ஆம்புலன்ஸ் மீது கார் மோதியது. இதில் பெண் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சென்னை திருவொற்றியூரை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 28). சென்னையில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். காஞ்சீபுரம் மாவட்டம் மாமல்லபுரத்திற்கு நண்பர்களுடன் சுற்றுலா சென்ற கார்த்திக், அங்கிருந்து நேற்று காலை சென்னைக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். அவரது நண்பர்கள் பின்னால் காரில் வந்தனர்.

மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று காலை 5½ மணி அளவில் வந்தபோது, சென்னையில் இருந்து மாமல்லபுரம் நோக்கி வந்த கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. பின்னர் அங்கிருந்த மின்கம்பத்தில் மோதி கார் நின்றது. இதில் கார்த்திக் படுகாயம் அடைந்தார். காரும் சேதம் அடைந்தது.

தகவல் அறிந்ததும் மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் திருநாவுக்கரசு, கன்னியப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். 108 ஆம்புலன்சை வரவழைத்து கார்த்திக்கை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்தனர்.

விபத்து நடந்த இடத்தின் அருகில் பஸ் நிறுத்தம் உள்ளது. அங்கு பஸ்சுக்காக காத்திருந்த சிலர் மாணவர் கார்த்திக்கை ஆம்புலன்சில் ஏற்ற உதவி செய்தனர்.

அந்த நேரத்தில் சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி வேகமாக வந்த கார் கண்இமைக்கும் நேரத்தில் ஆம்புலன்சின் பின்புறம் பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் ஆம்புலன்ஸ் 50 அடி தூரம் சென்று நின்றது.

இதில் காரும், ஆம்புலன்சும் சேதம் அடைந்தது. இந்த விபத்தில் கார்த்திக்கை ஆம்புலன்சில் ஏற்ற உதவி செய்த சென்னை தியாகராயநகரை சேர்ந்த ஏகாம்பரம் (50) என்பவரும், நுங்கம்பாக்கத்தை சேர்ந்த ஹேமசந்திரா (30) என்ற பெண்ணும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

ஏற்கனவே நடந்த விபத்தில் படுகாயம் அடைந்த கல்லூரி மாணவர் கார்த்திக்கும் இதில் சிக்கினார். மேலும், பிரேம்குமார், அஜித் மற்றும் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலன் இன்றி அடையாளம் தெரியாத நபர் உயிரிழந்தார்.

விபத்தை ஏற்படுத்திய 2 கார் டிரைவர்களும் காரை சம்பவ இடத்திலேயே நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

மனிதாபிமானத்தின் அடிப்படையில் விபத்தில் காயம் அடைந்தவருக்கு உதவி செய்ய போய் 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த விபத்து குறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். 


Next Story