வீராணம் ஏரி ஓரிரு நாட்களில் முழு கொள்ளளவை எட்டும்


வீராணம் ஏரி ஓரிரு நாட்களில் முழு கொள்ளளவை எட்டும்
x
தினத்தந்தி 6 Aug 2018 9:30 PM GMT (Updated: 6 Aug 2018 5:24 PM GMT)

கல்லணையில் இருந்து கீழணைக்கு கூடுதல் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் மூலம் வீராணம் ஏரி ஓரிரு நாட்களில் முழு கொள்ளளவை எட்டும் என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

காட்டுமன்னார்கோவில்,


கடலூர் மாவட்டத்தில் லால்பேட்டையில் உள்ளது வீராணம் ஏரி. 47.50 அடி கொள்ளளவு கொண்ட இந்த ஏரி காவிரியின் கடைமடை பகுதியாக இருப்பதுடன், மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக இருக்கிறது. மேலும் சென்னை மக்களின் குடிநீர் தேவையையும் வீராணம் ஏரி பூர்த்தி செய்து வருகிறது. ஏரிக்கு கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே உள்ள கீழணையில் இருந்து வடவாறு வழியாக தண்ணீர் வருவது வழக்கம்.

மேட்டூரில் இருந்து காவிரியில் திறக்கப்பட்ட தண்ணீர் கல்லணை வழியாக கீழணையை கடந்த மாதம் 26–ந்தேதி வந்தடைந்தது. அன்றைய தினமே 9 அடி கொள்ளளவு கொண்ட கீழணை நிரம்பியது.

இதையடுத்து அன்று இரவு முதல், வீராணம் ஏரிக்கு வடவாறு வழியாக கீழணையில் இருந்து வினாடிக்கு 2,200 கனஅடி நீர் திறந்து விடப்பட்டது. இதனால் வறண்டு கிடந்த வீராணம் ஏரியின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்தது.

இந்த நிலையில் கல்லணையில் இருந்து கீழணைக்கு வந்து கொண்டு இருந்த நீரின் அளவு படிப்படியாக குறைந்ததை அடுத்து, வீராணம் ஏரிக்கு திறந்து விடப்பட்டு வந்த நீரின் அளவும் குறைக்கப்பட்டது. அதன்படி நேற்று மாலையில் கீழணையில் இருந்து வீராணத்துக்கு வடவாறு வழியாக வினாடிக்கு 892 கனஅடி வந்து கொண்டு இருந்தது. இதனால் ஏரியின் நீர்மட்டம் மாலை நிலவரப்படி 45.40 அடியாக இருந்தது. இதன் மூலம் ஏரி இன்னும் ஓரிரு நாட்களில் அதன் முழு கொள்ளளவை எட்டுவதற்கு வாய்ப்பு இருப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதற்கிடையே வீராணம் ஏரிக்கு நீர் ஆதாரமாக இருக்கும் கீழணைக்கு, கல்லணையில் இருந்து கொள்ளிடம் ஆறு வழியாக நேற்று மாலை நிலவரப்படி வினாடிக்கு 892 கனஅடி நீர் வந்து கொண்டு இருந்தது. அந்த தண்ணீர் அப்படியே வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு திருப்பி விடப்பட்டது. கீழணையின் நீர்மட்டம் 7.2 அடியாக இருக்கிறது.

வீராணம் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டாத சூழ்நிலையில், அதன் நீர் ஆதாரமாக இருக்கும் கீழணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவது விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த நிலையில், கல்லணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றின் வழியாக கீழணைக்கு திறந்து விடப்பட்ட நீரின் அளவு 2 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. இந்த நீர் ஓரிரு நாட்களில் கீழணையை வந்தடையும். இதனால் நீர் வரத்து அதிகரித்து, கீழணையின் நீர்மட்டம் உயர்வதுடன், வீராணத்துக்கும் தடையின்றி தண்ணீர் வழங்க பயன்படும் என்று கீழணையை சேர்ந்த பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


Next Story