மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து குறைந்தது நீர்மட்டம் 119.06 அடியானது


மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து குறைந்தது நீர்மட்டம் 119.06 அடியானது
x
தினத்தந்தி 6 Aug 2018 10:45 PM GMT (Updated: 6 Aug 2018 6:41 PM GMT)

மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. நீர்மட்டம் 119.06 அடியாக குறைந்துள்ளது.

மேட்டூர்,

கர்நாடக மாநிலத்தில் கடந்த மாதம் பெய்த பலத்த மழை காரணமாக அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பின. அந்த அணைகளில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டதால் காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து வந்தது. அதிகபட்சமாக வினாடிக்கு 1 லட்சத்து 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.

அந்த நீர் தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வந்தடைந்தது. காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் ஒகேனக்கல் மெயின் அருவி, சினி பால்ஸ் ஆகிய அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. மேலும் ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

ஒகேனக்கல் வழியாக அதிகளவில் காவிரி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்ததால் அணை நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து கடந்த மாதம் 23-ந்தேதி அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டி நிரம்பியது. இதனால் அணை கடல் போல் காட்சி அளிக்கிறது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா மற்றும் கால்வாய் பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு வெளியேறிக்கொண்டு இருக்கிறது.

இதற்கிடையே கர்நாடக மாநிலத்தில் பெய்த மழை அளவு குறைந்தது. இதனால் அங்குள்ள அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டது. இதன் காரணமாக காவிரியில் நீர்வரத்து குறைந்துள்ளது. இதைத்தொடர்ந்து ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து குறைந்துள்ளதால் அணை நீர்மட்டம் குறைந்து கொண்டே வருகிறது. கடந்த 3-ந்தேதி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 13 ஆயிரத்து 278 கனஅடியாக இருந்தது. நேற்று முன்தினம் வினாடிக்கு 15 ஆயிரத்து 487 கனஅடியாகவும் இருந்தது. நேற்று நீர்வரத்து மேலும் குறைந்து வினாடிக்கு 11 ஆயிரத்து 633 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

அணை நீர்மட்டம் கடந்த 3-ந்தேதி 119.71 அடியாகவும், 4-ந்தேதி 119.61 அடியாகவும், நேற்று முன்தினம் 119.44 அடியாகவும், நேற்று 119.06 அடியாகவும் இருந்தது. அணையில் இருந்து நேற்று வினாடிக்கு 18 ஆயிரத்து 300 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வெளியேறிக்கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள தண்ணீரின் அளவை விட அணைக்கு வரும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் அணை நீர்மட்டம் குறைந்து கொண்டே வருகிறது. 

Next Story