மாவட்ட செய்திகள்

எத்தனை வழக்குகள் போட்டாலும் தொடர்ந்து ஆவணப்படம் எடுப்பேன் - இயக்குனர் திவ்யபாரதி பேட்டி + "||" + No matter how many cases I will continue to document Director Divyaabarathi interview

எத்தனை வழக்குகள் போட்டாலும் தொடர்ந்து ஆவணப்படம் எடுப்பேன் - இயக்குனர் திவ்யபாரதி பேட்டி

எத்தனை வழக்குகள் போட்டாலும் தொடர்ந்து ஆவணப்படம் எடுப்பேன் - இயக்குனர் திவ்யபாரதி பேட்டி
எத்தனை வழக்குகள் போட்டாலும் தொடர்ந்து ஆவணப்படம் எடுப்பேன் என்று கூடலூரில் ஆவணப்பட இயக்குனரும், வக்கீலுமான திவ்யபாரதி கூறினார்.

கூடலூர்,

‘கக்கூஸ்’ ஆவணப்பட இயக்குனரும், வக்கீலுமான கே.திவ்யபாரதி ஓகி புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் குறித்த ஆவணப்பட டிரெய்லரை (முன்னோட்டம்) இணையதளத்தில் வெளியிட்டார். இதில் தேசியக் கொடியை அவமரியாதை செய்தல் உள்பட 3 பிரிவுகளின் கீழ் திவ்யபாரதி மீது நீலகிரி மாவட்டம் கூடலூர் போலீசார் கடந்த மாதம் வழக்குப்பதிவு செய்தனர்.

இதனால் முன்ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் திவ்யபாரதி மனு தாக்கல் செய்தார். அதை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, கூடலூர் போலீஸ் நிலையத்தில் தினமும் காலை 10 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதனால் திவ்யபாரதி கூடலூர் போலீஸ் நிலையத்தில் கடந்த சில நாட்களாக ஆஜராகி கையெழுத்திட்டு வருகிறார்.

நேற்று காலை 10 மணிக்கு கூடலூர் போலீஸ் நிலையத்தில் திவ்யபாரதி கையெழுத்து போட்டு விட்டு வெளியே வந்தார். அப்போது அவர் கூறியதாவது:–

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒரு பிரிவாக உள்ள தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர் சங்கத்தின் மாவட்ட குழு உறுப்பினராக உள்ளேன். மேலும் வக்கீலாக இருந்து வருகிறேன். கக்கூஸ் ஆவணப்படத்தை எடுத்து வெளியிட்டதால் என் மீது பல வழக்குகள் போடப்பட்டன. இதுதவிர பல்வேறு மிரட்டல்கள் வந்தன.

இது குறித்து காவல்துறை உயர் அதிகாரிகளிடம் புகார் செய்தேன். எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. பா.ஜனதா ஆளும் மாநிலங்கள் உள்பட பிற மாநிலங்களில் கக்கூஸ் ஆவணப்படத்துக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளது. இதனால் பா.ஜனதா அரசு கக்கூஸ் ஆவணப்படத்தை வெளியிட பல்வேறு தடைகளை ஏற்படுத்தி உள்ளது.

2017–ம் ஆண்டு தமிழகம் மற்றும் கேரளாவை ஓகி புயல் தாக்கியது. இதில் மீனவர்கள், பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகினர். மத்திய அரசு மற்றும் அதன் கீழ் உள்ள வானிலை ஆய்வு மையம் முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழகம், கேரளாவில் மட்டும் சுமார் 500 மீனவர்கள் இறந்து விட்டனர். பலரை காணவில்லை. இதனால் ஓகி புயலால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரடியாக சென்று ஆவணப்படம் எடுத்துள்ளேன். இப்படம் இன்னும் வெளியிடப்பட வில்லை.

சுமார் 3½ நிமிடம் ஓடக்கூடிய டிரைய்லரை (முன்னோட்டம்) இணையதளத்தில் வெளியிட்டுள்ளேன். கக்கூஸ் படம் மக்களிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனால் பா.ஜனதா அரசு ஓகி புயல் பற்றிய ஆவணப்படத்தை வெளியிடாமல் இருக்க என் மீது வழக்கு போட்டுள்ளது. மேலும் என்னை சார்ந்த தோழர்களையும் மிரட்டி வருகிறது.

கூடலூர் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து உள்ளதால் என்னை அலைக்கழிக்க வைத்து, பயமுறுத்தவும் நினைக்கிறது. வருகிற 10–ந் தேதி வரை கூடலூர் போலீஸ் நிலையத்தில் கையெழுத்து போட உள்ளேன். நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் பெற்றவரிடம் விசாரணை நடத்தக்கூடாது.

ஆனால் கையெழுத்து போட வரும் என்னிடம் ஆங்கிலத்தில் 25 கேள்விகள் கேட்டு போலீசார் பல மணி நேரம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் என்னுடைய மூத்த வக்கீல்களின் ஆலோசனை பெற்று பதில் அளிப்பதாக தெரிவித்து உள்ளேன். நான் தேசியக்கொடியை அவமரியாதை செய்து உள்ளதாக வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

ஓகி புயலால் சேதம் அடைந்த படகில் இருந்த தேசியக்கொடியை படம் பிடித்தேன். நான் தேசியக்கொடியை அவமரியாதை செய்ய வில்லை. இப்போது கூடலூர் மண்வயலில் கட்சி நிர்வாகி ஒருவரின் வீட்டில் தங்கி உள்ளதால் போலீசார் என்னை தீவிரவாதி போல் சித்தரித்து தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். எத்தனை வழக்குகள் போட்டாலும் நான் தொடர்ந்து ஆவணப்படம் எடுத்து கொண்டே இருப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட நிர்வாகி முருகன் உடன் இருந்தார்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை அதிகாரியான மசினகுடி இன்ஸ்பெக்டர் முரளிதரன் கூறுகையில், தேசியக்கொடியை அவமரியாதை செய்ததால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. வழக்கு சம்பந்தமாக 25 கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தன. ஆனால் அவர் பதில் அளிக்கவில்லை. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றார்.