திருச்சி விமான நிலையத்தில் 2-வது நாளாக சி.பி.ஐ. சோதனை: சுங்கத்துறை உதவி ஆணையர் உள்பட 19 பேர் கைது


திருச்சி விமான நிலையத்தில் 2-வது நாளாக சி.பி.ஐ. சோதனை: சுங்கத்துறை உதவி ஆணையர் உள்பட 19 பேர் கைது
x
தினத்தந்தி 6 Aug 2018 11:15 PM GMT (Updated: 6 Aug 2018 11:43 PM GMT)

திருச்சி விமானநிலையத்தில் நேற்று 2-வது நாளாக சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இதையடுத்து தங்கம் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த சுங்கத்துறை உதவிஆணையர் மற்றும் அதிகாரிகள் உள்பட 19 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். மேலும், கணக்கில் வராத ரூ.9 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டது.

செம்பட்டு,

திருச்சி விமானநிலையம் சர்வதேச அந்தஸ்தை பெற்றுள்ளது. இங்கிருந்து இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, சவுதிஅரேபியா, துபாய், குவைத் உள்பட பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தினமும் ஏராளமான பயணிகள் திருச்சி விமானநிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்வதும், அங்கிருந்து வருவதுமாக உள்ளனர். திருச்சி விமானநிலையம் வழியாக தங்கம் கடத்தி வருவதை தடுக்கும் வகையில் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக கடத்தல் தங்கம் பிடிபடும் சம்பவம் அதிகரித்து வருகிறது.

வெளிநாடுகளில் இருந்து தங்கத்தை கடத்தி வரும் பயணிகள், விமானநிலையத்தில் அதிகாரிகளிடம் சிக்கினால், அந்த கடத்தலுக்கு பின்னணியில் யார்? யாரெல்லாம் இருக்கிறார்கள் என சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்துவார்கள். ஆனால் பயணிகள், கடத்தல் கும்பலை காட்டி கொடுக்காமல் குருவிகளை போல் வந்து செல்வது தெரியவந்தது. கடந்த மாதம் 31-ந் தேதி மலேசியாவில் இருந்து வந்த தனியார் விமானத்தில் கடத்தி வரப்பட்ட 6½ கிலோ தங்கம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றை விமானநிலையத்தில் இருந்து வெளியே கொண்டு செல்ல முயன்ற ஒப்பந்த ஊழியர்கள் 3 பேரை சுங்கத்துறை வருவாய் புலனாய்வுபிரிவு அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்தநிலையில் சிங்கப்பூரில் இருந்து ஏர்-இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்று முன்தினம் மாலை திருச்சி வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகள் சோதனைகளை முடித்துக்கொண்டு வெளியே செல்ல ஆயத்தமானார்கள். அப்போது விமானநிலையத்தின் வெளிப்புற பகுதியில் காத்திருந்த மதுரை சி.பி.ஐ. பிரிவு இன்ஸ்பெக்டர் மதுசூதனன் தலைமையில் 15 பேர் கொண்ட சி.பி.ஐ. அதிகாரிகள் மாலை 5.30 மணி அளவில் அதிரடியாக விமானநிலையத்துக்குள் புகுந்தனர். அங்கு சோதனை முடித்து வெளியே வந்த பயணிகளை தடுத்து நிறுத்தி மீண்டும் உள்ளே அழைத்து சென்றனர். அவர்களிடம் தீவிர சோதனை நடத்தினார்கள். பயணிகள் யாரையும் வெளியே அனுப்பவில்லை. 70 பயணிகள் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகளிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினார்கள்.

சி.பி.ஐ. அதிகாரிகளின் இந்த அதிரடி சோதனையை சற்றும் எதிர்பார்க்காத பயணிகள் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் பயணிகள் வருகை பகுதி, லக்கேஜ்களை ஸ்கேனர் செய்யும் பகுதி, சுங்க அதிகாரிகள் அலுவலகம் என அனைத்தையும் சி.பி.ஐ. அதிகாரிகள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். பயணிகளை தனித்தனியாக அழைத்து சென்று விசாரித்தனர். இதில் பயணிகள் சிலர் குருவிகளாக வந்துள்ளது தெரியவந்தது. அவர்கள் சிங்கப்பூரில் இருந்து எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை வாங்கி வந்து, வியாபாரிகளிடம் விற்பனை செய்ய இருந்ததும் தெரியவந்தது. அவ்வாறு குருவிகள் போல் வந்த பயணிகளுக்கு தங்கம் கடத்தலில் தொடர்பு உள்ளதா? எனவும் விசாரித்தனர். இந்த விசாரணையில், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகள் கொண்டு வரும் பொருட்களுக்கு முறையான வரியை செலுத்தாமல் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்துவிட்டு சென்றது தெரியவந்தது.

இது தொடர்பாக திருச்சி விமானநிலைய சுங்கத்துறை உதவி ஆணையர் வெங்கடேசுலு, கண்காணிப்பாளர்கள் கலுகசலமூர்த்தி, ராமகிருஷ்ணன், ஆய்வாளர்கள் அனீஸ்பாத்திமா, பிரசாந்த் கவுதம், அலுவலக ஊழியர் பிரடி எட்வர்ட் மற்றும் பயணிகள் புதுக்கோட்டையை சேர்ந்த முருகேஷ், திருச்சியை சேர்ந்த தமயந்தி, அவரது கணவர் தீவகுமார், மனோகரன் முத்துகுமார் என்கிற சரவணன், அப்துல்ரமீஸ், கனகா, சாந்தி, ராமலெட்சுமி, லட்சுமி, வள்ளி, புஷ்பா, இலங்கையை சேர்ந்த மகேஷ்வரன், சுரேஷ் ஆகிய 19 பேரை சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடியாக நேற்று கைது செய்தனர்.

பின்னர் அவர்களை திருச்சியில் இருந்து மதுரைக்கு அழைத்து சென்று சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளனர். மேலும், விமானநிலையத்தில் உள்ள சுங்கத்துறை அலுவலகத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தியபோது, அங்கு கணக்கில் வராத ரூ.9 லட்சத்து 4 ஆயிரம் இருந்தது. இந்த பணம் சிங்கப்பூரில் இருந்து வந்த பயணிகள் தாங்கள் கொண்டு வந்த பொருட்களுக்கு உரிய வரியை செலுத்தாமல் இருப்பதற்காக லஞ்சம் கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த தொகையையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

நேற்று முன்தினம் மாலை முதல் விடிய, விடிய சோதனை நடத்திய அதிகாரிகள், நேற்றும் தீவிர சோதனை நடத்தினார்கள். இதற்கிடையே சி.பி.ஐ. அதிகாரிகளில் ஒருபிரிவினர் கைது செய்யப்பட்ட சுங்கத்துறை அதிகாரிகளின் வீடுகளுக்கும் சென்று அதிரடியாக சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையில் அதிகாரிகளின் வீடுகளில் எவ்வளவு தங்கம் பிடிபட்டது என்பது உள்ளிட்ட விவரங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி விமானநிலையத்தில் இதேபோல் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினார்கள். அப்போது தங்கம் கடத்தி வரும் பயணிகளிடம் அலட்சியமாக இருந்த சுங்கத்துறை அதிகாரிகள் 2 பேரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்போது மீண்டும் திருச்சி விமானநிலையத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வரும் சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story