கும்மிடிப்பூண்டி அருகே தறிகெட்டு ஓடிய கன்டெய்னர் லாரி வீட்டுக்குள் புகுந்தது


கும்மிடிப்பூண்டி அருகே தறிகெட்டு ஓடிய கன்டெய்னர் லாரி வீட்டுக்குள் புகுந்தது
x
தினத்தந்தி 6 Aug 2018 9:30 PM GMT (Updated: 6 Aug 2018 7:06 PM GMT)

கும்மிடிப்பூண்டி அருகே தறிகெட்டு ஓடிய கன்டெய்னர் லாரி, அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதுடன், சாலையோரம் இருந்த வீட்டுக்குள் புகுந்தது. இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற அண்ணன், தங்கை படுகாயம் அடைந்தனர்.

கும்மிடிப்பூண்டி,

சென்னையில் இருந்து ஆந்திர மாநிலம் நோக்கிச்சென்ற கன்டெய்னர் லாரி ஒன்று நேற்று காலை 6 மணியளவில் கும்மிடிப்பூண்டியை அடுத்த சின்னஓபுளாபுரம் அருகே சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது.

ஆந்திரா நோக்கிச்சென்ற அந்த லாரி, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் உள்ள சிமெண்டு தடுப்பின் மீது ஏறி சாலையின் மறுபுறம் தறிகெட்டு ஓடியது.

அப்போது அந்த வழியாக எளாவூரில் இருந்து கவரைப்பேட்டை நோக்கிச்சென்ற மோட்டார்சைக்கிள் மீது பயங்கரமாக மோதியதுடன், சாலையோரம் இருந்த மற்றொரு லாரி டிரைவரான வெங்கடேசன்(வயது 42) என்பவரின் வீட்டுக்குள் புகுந்து நின்றது.

அண்ணன்-தங்கை படுகாயம்இதில் வீட்டில் இருந்தவர்கள் யாருக்கும் காயம் ஏதும் இல்லை. அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அந்த வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த சேகர்(48) என்பவருக்கு சொந்தமான சொகுசு கார் சேதம் அடைந்தது.

இந்த விபத்தில் மோட்டார்சைக்கிளை ஓட்டிச்சென்ற மகேஷ்(25), அவருடன் வந்த அவரது தங்கை மகேஸ்வரி(23) ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் 2 பேரும் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர

விபத்துக்கு காரணமான லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அவர், குடிபோதையில் இருந்ததால்தான் இந்த விபத்து ஏற்பட்டதாக போலீசாரிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

இதுகுறித்து கும்மிடிப்பூண்டி சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து தலைமையில் சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கு காரணமான கன்டெய்னர் லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story