பல்வேறு துறைகளில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது, அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு


பல்வேறு துறைகளில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது, அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு
x
தினத்தந்தி 6 Aug 2018 11:15 PM GMT (Updated: 6 Aug 2018 7:58 PM GMT)

சட்டம்–ஒழுங்கு, சமூகநலம் என பல்வேறு துறைகளில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்வதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

சிவகங்கை,

அ.தி.மு.க. அம்மா பேரவையின் சார்பில் அரசின் சாதனை விளக்க சைக்கிள் பேரணி நடைபெற்று வருகிறது. தேவகோட்டையில் தொடங்கிய இந்த பேரணி காரைக்குடி, திருப்பத்தூர் வழியாக நேற்று சிவகங்கையை வந்தடைந்தது. சிவகங்கை நகர் எல்லையில் நகர செயலாளர் ஆனந்தன் தலைமையில் பேரணிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் சிவகங்கை அரண்மனை வாசலில் உள்ள சண்முகராஜா கலையரங்கத்தில் அ.தி.மு.க. அம்மா பேரவை சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, அமைச்சர் பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது. சிவகங்கை எம்.பி. செந்தில்நாதன் முன்னிலை வகித்தார். இதில் மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றோர், விதவைகள் என 67 பேருக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்.

அதன்பிறகு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:– ஜெயலலிதா மறைவிற்கு பிறகு தமிழகத்தில் ஆட்சியை கலைத்துவிட்டு எப்படியாவது ஆட்சியை கைப்பற்றி விட வேண்டும் என்ற நோக்கத்தோடு பலரும் போராட்டங்களை நடத்தினர். அவர்களது கனவு பகல் கனவாகவே போனது. அத்தனை தடைகளையும் தகர்த்து, தற்போது அ.தி.மு.க. அரசு 18–வது மாதத்தில் அடியெடுத்து வைக்கிறது.

ஜெயலலிதாவின் தொலைநோக்கு திட்டத்தின் மூலம் நாட்டில் உள்ள மற்ற மாநிலங்களை விட தமிழகம் பொதுத்துறை, சட்டம்–ஒழுங்கு, சமூகநலம் என பல்வேறு துறைகளில் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. இதன் காரணமாகவே சிறப்பான ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் தமிழகம் 2–ம் இடத்தை பிடித்துள்ளது. அரசின் சாதனையை ஏழை–எளிய மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காகவே இந்த சைக்கிள் பேரணி நடத்தப்படுகிறது. பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து அ.தி.மு.க. தலைமை முடிவெடுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் முருகானந்தம், முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் சிவதேவ்குமார், மாணவரணி செயலாளர் ராஜா உள்பட பலர் கலந்துகொண்டனர். அடுத்ததாக இந்த சைக்கிள் பேரணி மானாமதுரை சென்று, அதன்பிறகு பார்த்திபனூர் வழியாக ராமநாதபுரம் செல்கிறது.


Next Story