காரைக்குடி அருகே ரசாயன ஆலை கொதிகலன் வெடித்ததால் பரபரப்பு, பொதுமக்கள் சாலை மறியல்
காரைக்குடி அருகே கோவிலூரில் ரசாயன ஆலை கொதிகலன் திடீரென்று வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நச்சுத்தன்மை காற்றில் பரவியதாக, ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
காரைக்குடி,
காரைக்குடி அருகே கோவிலூரில் தனியாருக்கு சொந்தமான துணிகளுக்கு சாயம் தயாரிக்கும் ரசாயன ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையை மூடக்கோரி அப்பகுதி பொதுமக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மேலும் ஆலையில் இருந்து நச்சுத்தன்மை வாய்ந்த வாயு காற்றில் பரவி அப்பகுதி மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்தநிலையில் நேற்றிரவு 8.30 மணி அளவில் ரசாயன ஆலையில் உள்ள கெமிக்கல் பவுடர் சேமித்து வைக்கப்படும் கொள்கலன் ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்தது. பயங்கர சத்தம் கேட்டதால் கோவிலூர் பகுதியில் வசிப்போர் அதிர்ச்சியடைந்து வீட்டை விட்டு வெளியே வந்தனர். மேலும் ரசாயன ஆலை கொதிகலன் வெடித்ததால் அதில் இருந்து ஒருவித வாயு வெளியேறியதாக கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து கோவிலூர் பகுதி மக்கள் ரசாயன ஆலையில் இருந்து வெளியேறிய கெமிக்கல் பவுடர் காற்றில் கலந்து நச்சுத்தன்மை ஏற்படுத்தியதாக புகார் கூறி ஆலையை முற்றுகையிட்டனர். பின்னர் கோவிலூர் பஸ் நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த குன்றக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆத்மநாதன் மற்றும் போலீசார் மறியல் செய்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் ரசாயன ஆலைக்குள் சென்று விசாரணை நடத்தினர். அப்போது ஆலை நிர்வாகம் சார்பில், இதுபோன்று கொதிகலன் வெடிப்பது அடிக்கடி நிகழும் பிரச்சினை தான். ஆனால் வெடித்த ஒருசில நிமிடங்களில் கொதிகலன் உடனடியாக சரிசெய்யப்பட்டது. மேலும் வாயு காற்றில் கலக்காமல் தகுந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து செல்லவில்லை. போராட்டம் இரவு 11 மணி வரை நீடித்தது. இதனால் கோவிலூர் வந்த அனைத்து அரசு பஸ்களும் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டன.