43 மயில்கள் சாகடிப்பு: குற்றவாளிகளை கண்டுபிடிக்க 12 பேர் கொண்ட குழு, வனத்துறை நடவடிக்கை


43 மயில்கள் சாகடிப்பு: குற்றவாளிகளை கண்டுபிடிக்க 12 பேர் கொண்ட குழு, வனத்துறை நடவடிக்கை
x
தினத்தந்தி 7 Aug 2018 4:15 AM IST (Updated: 7 Aug 2018 1:53 AM IST)
t-max-icont-min-icon

மதுரை கொடிக்குளத்தில் 43 மயில்கள் சாகடிக்கப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க 12 பேர் கொண்ட குழு அமைத்து வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

மதுரை,

மதுரை கொடிக்குளம் கண்மாய் அருகே 43 மயில்கள் இறந்து கிடந்தன. வி‌ஷம் கலந்த நெற்கதிர்களை தின்றதால் தான் இந்த மயில்கள் இறந்ததாக வனத்துறையினர் நடத்திய முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இறந்த மயில்கள் பரிசோதனை செய்யப்பட்டு மாட்டுத்தாவணி அருகே புதைக்கப்பட்டன. இருப்பினும் அதன் உடலில் இருந்து சில பாகங்கள் மட்டும் எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக பாதுகாக்கப்பட்டுள்ளன. மேலும் மயில்கள் இறந்து கிடந்த இடத்தின் அருகில் சிதறிய நெற்கதிர்களும் பரிசோதனை கூடத்திற்கு அனுப்பப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆய்வின் முடிவிலேயே மயில்கள் இறந்ததற்கான முழு காரணம் தெரியவரும். மேலும் இந்த முடிவுகளின் அடிப்படையில் தான் வனத்துறை வழக்குப்பதிவு செய்ய முடியும்.

மயில் தேசிய பறவை மட்டுமின்றி பாதுகாக்கப்பட்ட பறவை இனபட்டியலில் முதல் பிரிவில் இருக்கிறது. எனவே இதனை சாகடித்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வனத்துறை முடிவு செய்துள்ளது. இந்த மயில்கள் இறந்த சம்பவம் மதுரை மட்டுமின்றி இந்தியா முழுவதும் எதிரொலித்து உள்ளது. இதன்காரணமாக குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடிக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் மாவட்ட வனத்துறை உள்ளது.

இதையடுத்து மாவட்ட வன அலுவலர் தலைமையில் 12 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவினர் சோதனை அறிக்கை வரும் வரை காத்திருக்காமல் நெல்லில் வி‌ஷம் கலந்தது யார் என்பது குறித்த விசாரணையை தொடங்கி உள்ளது. இதற்காக மயில்கள் இறந்த பகுதியில் யார், யார் வந்தார்கள் என்பது குறித்த விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுஉள்ளது.

இதற்கிடையில் மயில்கள் இறந்தது குறித்த முழு அறிக்கையை தர வேண்டும் என்று மாவட்ட வனத்துறைக்கு கலெக்டர் வீரராகவராவ் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து கலெக்டர் கூறும் போது, ‘‘43 மயில்கள் இறந்த விவகாரத்தில் உண்மையை கண்டறிய முழு அறிக்கை தர வேண்டும் என்று மாவட்ட வன அலுவலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அவரது அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் சார்பாக தொடர் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இதுபோன்ற சம்பவம் எதிர்காலத்தில் நடக்காமல் இருப்பதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்‘‘. என்றார்.


Next Story