நாகையில் திருநங்கைகள் சுயதொழில் தொடங்க ரூ.1¾ லட்சம் நிதி உதவி கலெக்டர் வழங்கினார்


நாகையில் திருநங்கைகள் சுயதொழில் தொடங்க ரூ.1¾ லட்சம் நிதி உதவி கலெக்டர் வழங்கினார்
x
தினத்தந்தி 7 Aug 2018 4:00 AM IST (Updated: 7 Aug 2018 2:19 AM IST)
t-max-icont-min-icon

நாகையில் திருநங்கைகள் சுயதொழில் தொடங்க ரூ.1¾ லட்சம் நிதி உதவியை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் வழங்கினார்.

நாகப்பட்டினம்,

நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டமும், மாற்றுத்திறனாளிகளுக்கான வாராந்திர சிறப்பு குறைதீர்க்கும் கூட்டமும் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். மாற்றுத்திறனாளிகளுக்கான வாராந்திர சிறப்பு குறைதீர்க்கும் கூட்டத்தில் வங்கி கடன் மற்றும் உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து 11 மனுக்களும், மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து 216 என மொத்தம் 227 மனுக்கள் பெறப்பட்டன.

இந்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் ஒருவார காலத்திற்குள் விரைந்து நடவடிக்கை எடுத்து மனுதாரர்களுக்கு அறிவிக்குமாறு கலெக்டர் உத்தரவிட்டார்.

தொடர்ந்து கூட்டத்தில் சமூக நலத்துறையின் சார்பில் திருநங்கைகள் சுய தொழில் தொடங்க தலா ரூ.20 ஆயிரம் வீதம் 9 பேருக்கு ரூ.1.80 லட்சத்திற்கான காசோலையினையும், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஏற்பட்ட ஒக்கி புயலில் சிக்கி காயமடைந்த நாகை மாவட்டம் கீச்சாங்குப்பத்தை சேர்ந்த மீனவர் முரளி என்பவருக்கு நிவாரணத் தொகையாக ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையினையும், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 4 பேருக்கு தலா ஆயிரம் வீதம் மாதாந்திர உதவித்தொகையையும் கலெக்டர் வழங்கினார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன், தனித்துணை கலெக்டர்(சமூகப்பாதுகாப்புத் திட்டம்) வேலுமணி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

Next Story