என்ஜினீயரை கடத்திச்சென்று 3 பவுன் நகை பறிப்பு மயக்கப்பொடி தூவி மர்மநபர் துணிகர கைவரிசை


என்ஜினீயரை கடத்திச்சென்று 3 பவுன் நகை பறிப்பு மயக்கப்பொடி தூவி மர்மநபர் துணிகர கைவரிசை
x
தினத்தந்தி 7 Aug 2018 4:45 AM IST (Updated: 7 Aug 2018 2:27 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் மயக்கப்பொடி தூவி கம்ப்யூட்டர் என்ஜினீயரை கடத்தி சென்று 3 பவுன் நகையை பறித்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.

நாகர்கோவில்,

நாகர்கோவில் வடசேரி வணிகர் தெருவை சேர்ந்தவர் நாகப்பன், நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவருடைய மகன் சக்தி மணிகண்டன் (வயது 28). கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர், வடக்கன்குளத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

சக்தி மணிகண்டன் தனது கைக்கெடிகாரத்தை சரி செய்வதற்காக நேற்று முன்தினம் மாலை நாகர்கோவில் மீனாட்சிபுரத்துக்கு வந்தார். அவர் தேடி வந்த கடை பூட்டிக்கிடந்தது. உடனே அவர், அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை முன்புள்ள ஆவின் பாலகம் அருகில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது கட்டபொம்மன் சந்திப்பில் இருந்து ஒரு மோட்டார் சைக்கிளில் மர்மநபர் ஒருவர் வந்தார். அவர், சக்தி மணிகண்டனின் அருகில் வந்ததும் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு அவரிடம் ஏதோ முகவரி கேட்பது போல் பேச்சு கொடுத்ததாக தெரிகி றது. சக்தி மணிகண்டனும், அந்த நபரிடம் பேச்சு கொடுத்தார். திடீரென்று அந்த நபர், தான் கையில் வைத்திருந்த மயக்கப்பொடியை முகத்தில் தூவியதாக தெரிகிறது. இதில் சக்திமணிகண்டன் லேசான மயக்கம் அடைந்தார். உடனே மர்மநபர், சக்திமணிகண்டனை தனது மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் அமர வைத்து அங்கிருந்து வேறு இடத்துக்கு கடத்திச் சென்றுள்ளார்.

பின்னர் திருப்பதிசாரத்தில் இருந்து வீரநாராயணமங்கலம் செல்லும் சாலையில் மறைவான இடத்துக்கு மர்மநபர் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றுள்ளார். அங்கு பாதி மயக்க நிலையில் இருந்த சக்தி மணிகண்டனின் கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க சங்கிலியை மர்ம நபர் பறித்தார். மேலும் அவர் வைத்திருந்த பர்சையும் எடுத்துக்கொண்டார். பர்சில் 2 ஏ.டி.எம். கார்டுகள், சம்பள வவுச்சர் உள்ளிட்டவற்றை சக்தி மணிகண்டன் வைத்திருந்ததாக தெரிகிறது.

அதோடு சக்தி மணிகண்டன் கையிலும், சுமார் 2 பவுனில் ஒரு காப்பு போட்டு இருந்தார். அதையும் மர்ம நபர் அபகரிக்க முயன்றுள்ளார். ஆனால் காப்பை கழற்ற இயலவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மர்மநபர், சக்தி மணிகண்டனை சரமாரியாக தாக்கினார். இதனையடுத்து அவரை சாலையோரம் படுக்க வைத்துவிட்டு மர்ம நபர் தப்பிச் சென்றுவிட்டார்.

நீண்டநேரம் கழித்து மயக்கம் தெளிந்த சக்தி மணிகண்டன், தான் ஏதோ சாலையோரம் கிடப்பதையும், தனது உடலில் ஆங்காங்கே காயங்கள் இருப்பதை கண்டும் அதிர்ச்சி அடைந்தார். சிறிது நேரம் அங்கேயே அமர்ந்து யோசித்தார். அப்போதுதான் தனக்கு நேர்ந்தது குறித்து உணர்ந்தார். அங்கிருந்து அவர் எழுந்து நடக்க முடியாத நிலையை கண்ட அந்த பகுதி மக்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சக்தி மணிகண்டனுக்கு நேர்ந்த துயரம் பற்றி அவருடைய மனைவி பவித்ராவுக்கு தெரிவிக்கப்பட்டது. இதைக் கேட்டு பவித்ரா அதிர்ச்சியில் திடீரென மயங்கி விழுந்தார். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவரையும் கணவர் சிகிச்சை பெற்று வரும் அதே ஆஸ்பத்திரியில் உறவினர்கள் சேர்ந்தனர்.

இந்த துணிகர சம்பவம் குறித்து கோட்டார் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மயக்கப்பொடி தூவி என்ஜினீயரை கடத்தி நகையை மர்மநபர் பறித்துச் சென்ற சம்பவம் நாகர்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story