மாவட்ட செய்திகள்

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது + "||" + Sathiyamangalam Tigers in the archive Wildlife Census

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.

சத்தியமங்கலம்,

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதி புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சத்தி, தாளவாடி, டி.என்.பாளையம், கேர்மாளம், பவானிசாகர், ஆசனூர் என 6 வனச்சரகங்களை கொண்ட இந்த புலிகள் காப்பகத்தில் மான், யானை, சிறுத்தை, புலி, செந்நாய், கரடி என ஏராளமான விலங்குகள் வசித்து வருகின்றன.

6 மாதத்துக்கு ஒரு முறை இந்த 6 வனச்சரகங்களிலும் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறும். அதன்படி நேற்று சத்தியமங்கலம் வனப்பகுதியில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.

நேற்று காலை 10 மணி அளவில் சத்தியமங்கலம் அடுத்த காட்டுப்பண்ணாரி கோவில் அருகே அடர்ந்த வனப்பகுதியில் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. சத்தி வனச்சரகர் பெர்னாட், வனவர் சிவக்குமார் ஆகியோர் கணக்கெடுப்பு பணியை தொடங்கிவைத்தார்கள். மொத்தம் 6 நாட்கள் இந்த கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது. 300 வன ஊழியர்கள் மற்றும் ஆர்வலர்கள் இந்த கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டார்கள். இவர்கள் ஒவ்வொரு வனச்சரகத்திலும் 3 பேர் கொண்ட தனித்தனி குழுக்களாக பிரிந்து விலங்குகளின் கால்தடம், எச்சம், தண்ணீர் குடிக்க வரும் இடங்கள், மரங்களில் ஏற்பட்டுள்ள நகக்குறிகள் ஆகியவற்றை பதிவு செய்வார்கள்.

கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நவீன ஜி.பி.எஸ். கருவி, திசை காட்டும் கருவி ஆகியவையும் வழங்கப்பட்டுள்ளது. முதல் 3 நாட்கள் மற்ற விலங்குகளை வேட்டையாடி உண்ணும் விலங்குகள் பற்றிய கணக்கெடுப்பு நடைபெறுகிறது. அதன்பின்னர் 3 நாட்கள் மற்ற விலங்குகள் பற்றிய கணக்கெடுப்பு நடக்கிறது. 6 நாட்களுக்கு பிறகு கணக்கெடுப்பின் அறிக்கை தமிழ்நாடு தலைமை வனக்காப்பாளருக்கு அனுப்பி வைக்கப்படும். அவர் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள விலங்குகளின் எண்ணிக்கை பற்றி அறிவிப்பார்.