கடைமடை பகுதிக்கு தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டம்


கடைமடை பகுதிக்கு தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டம்
x
தினத்தந்தி 7 Aug 2018 4:15 AM IST (Updated: 7 Aug 2018 3:04 AM IST)
t-max-icont-min-icon

கடைமடை பகுதிக்கு தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அதிகாரிகளை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சேதுபாவாசத்திரம்,

கல்லணை திறக்கப்பட்டு 15 நாட்களுக்கு மேலாகியும் தஞ்சை மாவட்டத்தின் கடைமடை பகுதிகளை தண்ணீர் முழுமையாக சென்றடையவில்லை.

இதன் காரணமாக சேதுபாவாசத்திரம், பள்ளத்தூர், ஆண்டிகாடு, இரண்டாம்புளிக்காடு, நாடியம், குருவிக்கரம்பை, மருங்கப்பள்ளம், துறையூர், மரக்காவலசை, உடையநாடு, வீரியங்கோட்டை, முடச்சிக்காடு, கழனிக்கோட்டை, வாத்தலைக்காடு, பூக்கொல்லை, ரெட்டவயல், கழனிவாசல், முதுகாடு, மணக்காடு உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் சம்பா சாகுபடி பணிகளை தொடங்க முடியாமல் வேதனையில் உள்ளனர்.

இந்த நிலையில் கடைமடை பகுதிக்கு தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விவசாயிகள் நேற்று குருவிக்கரம்பை மடத்துவாசல் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் சேதுபாவாசத்திரம் வடக்கு ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் முத்துமாணிக்கம், ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியன், குருவிக்கரம்பை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வைரவன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாமாசெந்தில்நாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்டக்குழு உறுப்பினர் கருப்பையா, ஒன்றிய செயலாளர்கள் குமரசாமி, வேலுசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பேராவூரணி தாசில்தார் பாஸ்கரன், கல்லணை கால்வாய் உட்கோட்ட பேராவூரணி உதவி செயற்பொறியாளர் செல்வராஜ், பேராவூரணி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜனார்த்தனன் மற்றும் அதிகாரிகள் அங்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகளுடன் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது விவசாயிகள்-அதிகாரிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து விவசாயிகள், அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் நாகுடி வாய்க்காலில் வருகிற வெள்ளிக்கிழமை முதல் 5 நாட்கள் முழு கொள்ளளவு தண்ணீர் திறக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதன்பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. விவசாயிகளின் போராட்டம் காரணமாக பேராவூரணி-பட்டுக்கோட்டை சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story